2012-04-13 15:10:46

சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுத வியாபாரம் நிறுத்தப்பட WCC வலியுறுத்தல்


ஏப்.13,2012. உலகில் சட்டத்துக்குப் புறம்பே நடைபெறும் ஆயுத வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுகளை வலியுறுத்தியுள்ளது WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம்.
வருகிற ஜூலையில் ஐ.நா.வில் கூட்டம் நடத்த வரும் போது, ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்துலக ஆயுத வியாபார ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவிக்குமாறு சுமார் 200 நாடுகளின் தூதர்களைக் கேட்டுள்ளது WCC.
கடுமையான குற்றங்களும் வன்முறைகளும் இடம் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் கண்டிப்பான வழிமுறைகளைச் செயல்படுத்துமாறு கேட்டுள்ள WCC, இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்களைப் பெற விரும்புவதாகவும் கூறியுள்ளது.
30 நாடுகளைச் சேர்ந்த உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் பிரதிநிதிகள், ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் 20 அரசுகளை ஏற்கனவே சந்தித்து இவ்வொப்பந்தம் குறித்து விவாதித்துள்ளனர்.
கிறிஸ்தவ, இசுலாம், யூத மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள், அனைத்துலக ஆயுத வியாபார ஒப்பந்தத்திற்கு ஆதரவான பல்சமய அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.