2012-04-12 15:24:43

உலகின் 54 நாடுகளைச் சார்ந்த இறையியல் அறிஞர்கள் அசிசி நகரில் மேற்கொள்ளும் கலந்துரையாடல்


ஏப்ரல்,12,2012. உலகின் 54 நாடுகளைச் சார்ந்த 250க்கும் அதிகமான இறையியல் அறிஞர்கள் ஏப்ரல் 17ம் தேதி, வருகிற செவ்வாயன்று இத்தாலியில் உள்ள அசிசி நகரில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"அசிசி 2012: 21ம் நூற்றாண்டில் உரையாடலுக்கான வழி வகைகள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெறும் என்று கருத்தரங்கின் அமைப்பாளரான முனைவர் Gerard Mannion செய்தியாளர்களிடம் கூறினார்.
பல்வேறு கிறிஸ்தவ சபைகளிடையிலும், பல்வேறு மதங்களிடையிலும் காணப்படும் ஒத்தமைந்த கருத்துக்கள் இக்கருத்தரங்கின் துவக்கத்தில் ஆய்வு செய்யப்படும் என்று கூறிய முனைவர் Mannion, தொடர்ந்து, மதங்களிடையிலும், சபைகளிடையிலும் உள்ள வேறுபாடுகளைக் களையும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
ஆஸ்திரேலியா, கானடா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் சமய உரையாடல் பணியில் ஈடுபட்டுள்ள பல மையங்களின் அறிஞர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்போரை அசிசி உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Domenico Sorrentino, ஏப்ரல் 17ம் தேதி மாலை வரவேற்பதோடு இக்கருத்தரங்கு ஆரம்பமாகும்.








All the contents on this site are copyrighted ©.