2012-04-12 15:27:04

இந்தியாவில் இலவசக் கல்விச் சட்டம்


ஏப்.12,2012. இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய கல்வி வழங்கும் அடிப்படை உரிமை என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்த சட்டத்திற்குட்பட்டு பள்ளிகளில் ஏழைச் சிறாருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்துச் சிறாருக்கும் 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வி வழங்க வகை செய்யும் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் பதிவானது.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி S H Kapadia தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு இவ்வியாழனன்று தீர்ப்பளித்தது. இதன்படி, அனைவருக்கும் கல்வி வழங்கும் சட்டம் இவ்வியாழன் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உதவி பெறாத பள்ளிகள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதன் மூலம் பல மாநிலங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.








All the contents on this site are copyrighted ©.