2012-04-11 16:31:56

மலாவியின் புதிய அரசுத்தலைவருடன் அந்நாட்டு ஆயர்கள் சந்திப்பு


ஏப்ரல்,11,2012. ஆப்ரிக்காவின் மலாவியில் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் Joyce Banda ஏழைகளின் நண்பர் என்றும், நாட்டில் முக்கியமான மாற்றங்களைக் கொணரும் திறமை பெற்றவர் என்றும் மலாவி ஆயர் பேரவையின் உதவித் தலைவரான ஆயர் Thomas Msusa கூறினார்.
மலாவி நாட்டின் அரசுத் தலைவரும், கத்தோலிக்கருமான Bingu wa Mutharika அவர்கள் அண்மையில் திடீர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள Joyce Banda அவர்களை இப்புதனன்று அந்நாட்டு ஆயர்கள் சந்தித்துள்ளனர்.
அரசுத் தலைவர் Mutharikaன் திடீர் மரணத்தால், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாகாமல், அமைதியான முறையில் அரசு பொறுப்பு மாறியிருப்பதற்கு ஆயர்கள் தங்கள் மகிழ்வைத் தெரிவித்துள்ளனர்.
62 வயதான புதியத் தலைவர் Joyce Banda ஏழைகள், ஆதரவற்றக் குழந்தைகள் மட்டில் தனி அன்பு காட்டுபவர் என்று கூறிய ஆயர் Msusa, நாட்டில் நிலவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் களைவது புதியத் தலைவரின் முக்கியப் பணியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
புதியத் தலைவர் Joyce Banda ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் பொறுப்பேற்கும் முதல் பெண் அரசுத் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.