2012-04-11 16:32:20

புது டில்லியில் இந்திய ஒலிம்பிக் கழக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்


ஏப்ரல்,11,2012. இந்தியாவின் போபால் நகரில் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கொடூர நச்சுவாயு விபத்தில் உயிர் தப்பிய 100க்கும் அதிகமானோர் இச்செவ்வாயன்று புது டில்லியில் இந்திய ஒலிம்பிக் கழக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாண்டு ஜூலை மாதம் இலண்டன் மாநகரில் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிதி உதவி செய்து வரும் Dow Chemical என்ற பன்னாட்டு நிறுவனம், போபால் நச்சு வாயு விபத்துக்குக் காரணமான Union Carbide நிறுவனத்தைத் தன்னோடு இணைத்துக் கொண்ட ஒரு நிறுவனம். அந்நிறுவனத்தின் பெயரால் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று போராட்டம் நடத்தினர், இவ்விபத்திலிருந்து உயிர்தப்பியவர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டோரைச் சந்தித்த இந்திய ஒலிம்பிக் கழகத்தின் தற்காலிக தலைவர் V K Malhotra, ஒலிம்பிக் போட்டிகளை ஆதரிக்கும் தொகையை Dow Chemical இடமிருந்து பெறக்கூடாது என அகில உலக ஒலிம்பிக் கழகத்தைத் தாங்கள் வலியுறுத்தப்போவதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசு இதே விண்ணப்பத்தை அகில உலக ஒலிம்பிக் போட்டிகள் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது. Union Carbide நடத்தி வந்த ஆலையிலிருந்து ஏற்பட்ட நச்சு வாயு கசிவுக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று Dow Chemical நிறுவனம் கூறிவருகிறது.








All the contents on this site are copyrighted ©.