2012-04-10 15:04:08

இலங்கையில் ஆள்கடத்தல்கள் நிறுத்தப்பட 26 அமைப்புகளின் குரல்


ஏப்ரல்,10,2012. இலங்கையில் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கடத்தல், காணாமல் போதல் பொன்றவை பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்து, கடத்திச் செல்லப்பட்டோரை 24 மணிநேரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று 26 அமைப்புக்கள் அரசாங்கத்திற்குக் காலக்கெடு விதித்துள்ளன.
கால்களை முறித்தல், தாடியை வெட்டி வாய்க்குள் திணித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளித்து அரசு செயற்பட்டால், நாட்டில் சடலங்களே மிஞ்சும் என்று அவ்வமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க முக்கிய தலைவர்கள், இடதுசாரி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்ட அறிஞர்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்புக்களைச் சேர்ந்தோர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐக்கிய சோஸலிச கட்சியின் பிரதிநிதி சிறிதுங்க ஜெயசூரிய, இலங்கை அரசு இவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதால், கடத்தல்கள், காணாமல் போதல்கள் அதிகரித்து, அது உச்சநிலைக்கு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
அரசியல் பேதங்களைக் கைவிட்டுவிட்டு மனிதாபிமானம் குறித்து கலந்துரையாட வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும், ஒன்றரை மாதத்திற்குள் 54 கடத்தல் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன என்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.