2012-04-09 15:10:48

மருந்துக்குக் கட்டுப்படாத மலேரியா: ஆய்வாளர்கள் எச்சரிக்கை


ஏப்ரல்,09,2012. மலேரியா நோய்க்கிருமிகள், மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
மலேரியா நோய்க்கிருமியானது கொசுக்கடி மூலம் பரவுகிறது. இக்கிருமிக்கு எதிராக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துக்குக் கட்டுப்படாமல் போகிற ஒரு தன்மையை இக்கிருமிகளிடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக கம்போடியாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த வகையான நோய்க்கிருமிகள், முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் தூரத்தில், பர்மா தாய்லாந்து எல்லைப்பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேரியா நோய்க் கிருமிகளைக் கடந்த பத்தாண்டுகள் ஆராய்ந்துவருபவர்கள், இந்நோயை முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துவருகின்ற முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய ஓர் ஆபத்து இது என, தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ இதழில் தெரிவித்துள்ளனர்.
கொசுக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரவுவதனால் மருந்துக்குக்கு கட்டுப்படாத நோய்க்கிருமி பரவுகிறதா அல்லது ஆங்காங்கே இருக்கும் நோய்க்கிருமிகளிலேயே மருந்துக்கு கட்டுப்படாத இந்த தன்மை உருவாகிறதா என்று இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற மலேரியா கிருமி இந்தியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தென்பட ஆரிம்பித்தால், அரசுகளும், பிற உதவியமைப்புகளும் என்னதான் முயன்றாலும் மலேரியாவை முற்றுமாக ஒழிப்பதென்பது இயலாமற்போகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.