2012-04-06 12:51:49

திருத்தந்தை : “ஓர் அருட்பணியாளர் ஒருபோதும் தனக்குச் சொந்தமானவர் அல்ல”


ஏப்.06,2012. “ஓர் அருட்பணியாளர் ஒருபோதும் தனக்குச் சொந்தமானவர் அல்ல”, மாறாக, சிலுவை மரணம்வரை வாழ்ந்து காட்டிய கிறிஸ்துவின் பணிவு உள்ளிட்ட அவரது வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் ஒத்துப்போகும் விதத்தில் அருட்பணியாளர் எப்போதும் இயேசுவுக்கு உரியவராய் இருப்பதன் வழியைத் தேடுகிறார், மேலும், பணிவின்மை, “பாதையல்ல”, அது திருஅவையைப் புதுப்பிக்காது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புனித வியாழன் காலையில் “Chrism Mass” எனப்படும் திருஎண்ணெய் அர்ச்சிப்புத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். இந்நாளில் உலகெங்குமிருக்கின்ற கத்தோலிக்கப் பேராலயங்களில் அருட்பணியாளர்கள் தங்களது மறைமாவட்ட ஆயருடன் சேர்ந்து இத்திருப்பலியை நிறைவேற்றுகின்றனர். மூன்று ஜாடிகளில் அர்ச்சிக்கப்படும் இத்திருஎண்ணெய், திருமுழுக்கு, உறுதிபூசுதல், நோயில்பூசுதல், குருத்துவம் ஆகிய அருளடையாளங்களின் போது பயன்படுத்தப்படும். மேலும், இத்திருப்பலியில் அருட்பணியாளர்கள் தங்களது குருத்துவத் திருநிலைப்பாட்டு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கின்றனர்.
கர்தினால்கள், ஆயர்கள் அருட்பணியாளர்கள் என, 1,600க்கு மேற்பட்டோரும், ஆயிரக்கணக்கான பொதுநிலை விசுவாசிகளும் கலந்து கொண்ட புனித வியாழன் திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, குருகுலத்தார் எல்லாரும் தங்களது குருத்துவத் திருநிலைப்பாட்டின் உண்மையான அர்த்தம் பற்றிச் சிந்திப்பதற்கு இந்நாளைப் பயன்படுத்துமாறு தான் விரும்புவதாகக் கூறினார். இதில் தன்னையும் இணைத்தே சொன்னார்.
நம் ஆண்டவர் இயேசுவுடன் அதிகமதிகமாக ஒன்றித்திருக்கவும், அவருக்கு நெருக்கமுடையவர்களாக வாழவும் உறுதி பூண்டுள்ளோமா? என்ற கேள்வியை குருகுலத்தாரிடம் எழுப்பிய திருத்தந்தை, இதற்கு ஒருவர் தனக்குரியதை, தன்னிறைவு வீண்பெருமையை உதறித்தள்ள வேண்டியிருக்கிறது, இதில், நமக்கும், எனக்கும் நமது வாழ்வை நமக்குரியதாக்காமல், அடுத்தவருக்குரியதாய், கிறிஸ்துவுக்குரியதாய் ஆக்க வேண்டியிருக்கின்றது என்று தெரிவித்தார்.
இதனை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், கிறிஸ்துவுக்கு உகந்தவராய் இருப்பது, பணிவிடை பெற அல்ல, பணிவிடை செய்பவராகவும், எடுப்பவராக அல்ல, கொடுப்பவராக இருக்க வேண்டும் என்ற அவர், குருத்துவத்தின் தன்மை இதுவென்றால், இன்றையத் “திருஅவையின் திடீர்திருப்ப நிலைமையை” அடிக்கடி எதிர்கொள்ளும் போது குருக்களின் பதில் எத்தகையதாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
பெண்களின் குருத்துவத் திருநிலைப்பாடு உள்ளிட்ட திருஅவையின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கு எதிராகப் பணிவின்மை அறிக்கை ஒன்றை ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்து குருக்கள் குழு ஒன்று அண்மையில் வெளியிட்டது. பெண்களின் குருத்துவத் திருநிலைப்பாடு குறித்த விவகாரம் பற்றி அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் வெளியிட்ட அறிக்கையில், திருஅவை, நம் ஆண்டவரிடமிருந்து எந்த அதிகாரத்தையும் பெறவில்லை என்று குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வறிக்கையை வெளியிட்டவர்கள் திருஅவையின் மீது கொண்டுள்ள அக்கறையால் ஒருவேளை, தூண்டப்பட்டிருக்கலாம், திருஅவையை காலத்துக்கு ஏற்றாற் போல் அமைப்பதற்கும், புதி்ய பாதைகளைத் திறந்து விடுவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் உதவும் என நம்பியிருக்கலாம், ஆனால், இதைச் செய்வதற்கு இந்தப் பணிவின்மை அறிக்கை உண்மையான பாதையா? என்றும் கேட்டுள்ளார்.
உண்மையான புதுப்பித்தல் என்பது, கிறிஸ்துவோடும் இறைவனின் விருப்பத்துக்கும் ஒத்திணங்கியதாய் இருக்கும் வாழ்க்கையில் அடித்தளத்தைக் கொண்டதாய் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.
கிறிஸ்துவும் மனித மறுதலிப்புக்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் வழிகளைத் தேடினார், ஆனால் இறைவனின் வார்த்தைகளையும், அவரது விருப்பத்தையும் மறைக்கும் பழக்கவழக்கங்களை மட்டுமே அவர் திருத்த முயற்சித்தார் என்ற திருத்தந்தை, இறைவனுக்குத் தாழ்மையுடன் பணிந்து நடந்து அவரது திருஅவையின் போதனைகளைப் பின்பற்றுவது, மரபுகளைப் பாதுகாப்பதற்குச் சாக்குப்போக்குகள் ஆகாது என்றும் கூறினார்.
உண்மையான புதுப்பித்தல் எப்படி இருக்கிறது என்பதை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்துக்குப்பின் வந்த காலம் காட்டுகிறது, இதனைப் பல புதிய இயக்கங்கள் மற்றும் வாழ்வு முறைகளில் காண முடிகின்றது, இவை தீவிரப் பணிவாலும், விசுவாசத்தின் மகிழ்ச்சியாலும், உயிரோட்டமான நம்பிக்கையாலும், அன்பின் சக்தியாலும் நிறைந்துள்ளன என்றும் மறையுரையில் தெரிவித்தார் திருத்தந்தை.
சிறப்பான விதத்தில் திருஅவைக்குப் பணிசெய்து அதனைப் புதுப்பிப்பதற்கும் மனித சமுதாயத்துக்குத் திருப்பணி செய்வதற்கும் எல்லாக் குருக்களும், கிறிஸ்துவையும் புனிதர்களையும் தொடர்ந்து பின்பற்றுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, பெருமளவான எண்ணிக்கையிலும் வெளிப்படையான வெற்றிகளிலும் இறைவன் கருத்தாய் இல்லை, மாறாக, கடுகுவிதை போன்ற தாழ்மையான அடையாளங்களில் அவரது வெற்றிகள் இருக்கின்றன என்றார்.
போதகர்கள் என்ற தங்களது பணியை ஆயர்களும் குருக்களும் நினைவுபடுத்தி, நமது நவீன சமுதாயத்தில் வளர்ந்து வரும் சமய அறிவற்றதன்மைக்கு எதிராகச் செயல்பட வருகின்ற விசுவாச ஆண்டைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
நாம் நமது தனிப்பட்ட கொள்கைகளையும் கருத்துக்களையும் அல்ல, ஆனால் நாம் திருஅவையின் விசுவாசத்தைப் போதிக்கிறோம், இப்போதனைகளின் உண்மையான வழிகாட்டிகள் திருமறைநூலில் இருப்பது மட்டுமல்ல, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தொகுப்புகள், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் எழுத்துக்கள் ஆகியவற்றிலும் உள்ளன என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்தப் போதனைகள் போதிப்பவர்களின் வாழ்க்கையில் காணக்கூடிய விதத்தில் வாழ்ந்து காட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டில் ஆஸ்ட்ரியாவின் 4,200 குருக்களில் 250 குருக்கள் சேர்ந்து பணிவின்மைக்கு அழைப்பு என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.