2012-04-06 14:12:49

சிலுவைப்பாதை - அவைகளே பேசட்டும்….


முன்னுரை :

சிலுவைப்பாதை இயேசுவின் பாதை . தந்தையின் திருவுளத்திற்கு இசைந்து ஒலிவமலை போராட்டத்திற்கு பின் மனுக்குலத்தை மீட்பதற்கு இயேசு தானாக தெரிவு செய்த பாதை. இரத்தம் சொட்டச் சொட்ட, முள்முடி சிரசைத் துளைக்க, பாரச்சிலுவை தோளை அழுத்த, கசையடிகள் உடலைச் சல்லடையாக்க, எள்ளிநகையாடல், ஏளனக்குரல்கள், காறி உமிழ்தல் என்ற அனைத்துக் கொடுமைகளுக்கும் மத்தியில்; கொண்ட கொள்கையில் சற்றேனும் தளராமல் பதிவுகளை மேற்கொண்ட பாதை. இந்தப் பாதையில் சந்திப்புக்களும், பங்கெடுப்புக்களும் கல்வாரி நோக்கிய இயேசுவின் இலட்சியப் பயணத்திற்கு பலம் கொடுத்தன. இந்தப் பாதையின் நிலைகளை நாம் தியானித்திருக்கின்றோம். பங்கெடுத்த மனிதர்களின் அனுபவங்களை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் இப்போது இந்தப் பாதையில் முக்கிய பங்குவகித்து, இயேசுவின் உடலில் பல தாக்கங்களை உருவாக்கிய பொருட்களைப் பற்றியும், அவைகூறும் இறையனுபவ சாட்சியத்தையும் தியானிக்க இருக்கின்றோம். சிலுவைப்பாதையில் இயேசு பேசினார்; சுற்றியிருந்தவர்கள் பேசினார்கள்.
இதோ! பொருட்களும் பேசுகின்றன... செவிமடுப்போம்.

சாட்டை :
யோவான் 19 : 1-3

உரோமையச் சட்டப்படி தண்டனைக்குரியவைகளைத் தண்டிப்பதற்காக படைவீரர்கள் சாட்டையாகிய எங்களைப் பயன்படுத்துவார்கள். மற்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாங்கள் வடிவமைக்கப்பட்டோம். எங்களைப் பயன்படுத்தி ஒருவருக்குத் தண்டனை கொடுப்பது, பலருக்கு வேடிக்கையான விடயமாக இருந்தது. இன்ன குற்றம் செய்தாரை இத்தனை முறைகள் அடிக்க வேண்டும் என்ற எண்ணிக்கையோடு, அதிகப்படியாக 39 கசையடிகள் கொடுப்பது என்ற வரையறையும் இருந்தது.
எங்களின் தோற்றம், பார்க்கும் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தும். மரத்தினால் ஒரு கைப்பிடி; அந்தக்கைப்பிடியில் இருந்து இரும்பு இழைகள்; அவற்றில் ஆங்காங்கே இரும்புக் குண்டுகள்; சிறு எலும்புத்துண்டுகள், இடையிடையே தசைநார்களைக் கிழிக்கக்கூடிய கூர்மையான சிறு இரும்புத் தகடுகள். இதுதான் எங்களின் தோற்றம். எங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் போது நாங்கள் அக்குற்றவாளியின் உடலை சல்லடை செய்து விடுவோம்.
அன்றும் ஒரு மனிதனுக்கு எங்கள் கைவரிசயைக் காட்ட கட்டாயப்படுத்தப்பட்டோம். ஆனால் இம்முறை அம்மனிதன் குற்றவாளியல்ல மாறாக, மானிடத்தை மீட்கவந்த ஓர் உத்தமன். யூதர்களின் கல்மனதைக்கரைக்க, அவரின் உருக்குலைந்த உடலைப் பார்த்தாவது ''இவனைக் கொல்லுங்கள்'' என்ற கூச்சலை மக்கள் நிறுத்துவார்கள் என்று பகல் கனவு கண்டு, பிலாத்து கொடுத்த தண்டனை இந்த கசையடி.

எங்களை ஓங்கி அடித்தார்கள், எங்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்புத்துண்டுகளும், எலும்புத்துண்டுகளும் அவரின் முதுகைக் கிழித்து, எலும்புகள் வெளியே தெரியும்படிச் செய்தன. இத்தனைக்கும் அவர் உறுதிதளரவில்லை. அஞ்சா நெஞ்சம் கொண்டவராக வல்லமையோடு மீண்டும் மீண்டும் எழுந்து நின்றார். அந்த உத்தமரின் மனப்பலத்தை உடைப்பதற்கு எண்ணிக்கையும் வரையறையைத் தாண்டிச் சென்றது. அவரின் கைகள் கட்டப்பட்ட அந்த தூணைச் சுற்றி இரத்தம் ஆறாய் பெருகியது. கல்மனம் படைத்த மனிதர்களின் மனம் இளகவில்லை, இன்னும் கல்லாய்ப் போனது.
மனிதனே! எத்தனை முறை என்னைப் பயன்படுத்தி, மற்றவர்களைத் தண்டித்து மனதைக் கல்லாக்குகின்றாய்? இறைமகன் உனக்காகத்தான் எனது அடிகளைத் தாங்கிக்கொண்டார். உன்னை மீட்க கொண்ட கொள்கையைத் தளரவிடவில்லை. உனது கொள்கை என்ன?

முள்முடி:
மாற்கு 15 : 16 - 20

முடி அல்லது மகுடம் பெருமைக்குரிய ஒரு பொருள். அரசர்களையும், போரிலே வென்றவர்களையும், தலைமை ஏற்பவர்களையும், இலட்சியத்தில் உறுதியானவர்களையும் கெளரவிப்பதற்காக எங்களை மனிதர்கள் அணிவிப்பார்கள். நாங்கள் என்றும் உயரத்திலே வைக்கப்பட்டோம். எங்களை அணிவதால், மக்கள் புகழைத் தேடிக் கொண்டார்கள்.
ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எங்கள் வரலாற்றில் ஒரு துன்பியல் நிகழ்வு நடந்தது. இது ஒரு துன்பியல் நிகழ்வாக இருந்தாலும், அந்த மாமனிதனால் நாங்கள் பெருமைப்படுத்தப்பட்டோம். அந்த மாமனிதன் இறைமகன் இயேசு.
ஒரு புதருக்குள் அநாதரவாக இருந்த எங்களை உரோமையப் போர்வீரர்கள் பறித்து சிறு முட்புதராக்கி அந்த உத்தமனின் தலையில் முள்முடியாக அணிவித்தார்கள். அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் கோலால் தலையில் அடித்து அந்தமனிதனின் இரத்தநாளங்களுக்குள் எங்களை வலுக்கட்டாயமாக நுழைத்தார்கள். ''யூதர்களின் அரசன் வாழ்க'' என்று ஏளனம் செய்தார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மாறாக, அந்த மனிதனின் சிரசில் நாங்கள் இருந்தபோது, சுற்றிநின்றவர்களின் செயல்கள் எங்களுக்கு அருவருப்பாக இருந்தாலும், அந்த உத்தமரைப்பற்றி சில உண்மைகளை நாங்கள் புரிந்து கொன்டோம்.

அவரின் சிரசினை நாங்கள் ஊடுருவிய போது அங்கே தந்தையின் திருவுளம் இருந்தது. மனிதனைத் தனது குருதி சிந்தலினால் பாவத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஒரு வேகம் இருந்தது. இறுதிவரை பகைவரை மன்னித்து எல்லாரையும் அன்பு நெறியில் வழிநடத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
மானிடமே! முள்முடியாகிய நாங்கள் உங்களிடம் கேட்பது, மற்றவரின் இரத்தம் சிந்தலில் மகிழாதே; காலங்கள் உருண்டாலும், வரலாறு மாறினாலும், இரத்தக்கதறல்களும், ஒப்பாரிகளும் நியாயம் கிடைக்கும்வரை வரலாற்றில் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆணி + சுத்தியல் :
யோவான் 19 : 17

நாங்கள் நால்வரும் நண்பர்கள், அதாவது, மூன்று ஆணிகளும் ஒரு சுத்தியலும். ஒரு பொருளை இன்னுமொரு பொருளோடு இணைப்பதற்கு எங்களை மனிதர்கள் பயன்படுத்துவார்கள். ஆணிகளாகிய எங்களை ஒரு பொருளின் மீது வைக்கும்போது எங்கள் நண்பன் சுத்தியல் எங்கள் தலைமீது ஓங்கி அடிப்பான். அந்த அடியின் வேகத்தில் நாங்கள் பொருளைத் துளைத்து, ஒரு பொருளை மற்றொரு பொருளோடு இணைத்துவிடுவோம். இதுதான் எங்கள் முக்கியப் பணி. உரோமையர்களின் காலத்தில் எங்கள் பரம்பரைக்கே விருப்பம் இல்லாத ஒரு செயலையும் செய்ய மனிதர்களால் கட்டாயப்படுத்தப்படோம். அதுதான் சிலுவையுடன் மனிதர்களை இணைப்பது. குருதிப்புலன்களுக்குள் ஊடுருவி வேதனையை மனிதர்களுக்கு கொடுப்பது. இந்தக் கொடிய அருவருப்பான வேலையைச் செய்வதற்கு எங்களுள் சிலர் மட்டுமே தெரிவு செய்யப்படுவோம். அன்றும் அப்படித்தான் நாங்கள் தெரிவு செய்யப்பட்டோம். ஒரு உத்தமனுடைய கைகளையும், கால்களையும் துளைப்பதற்காக.
அந்த மனிதனை யார் என்று எங்களுக்கு முன்பின் தெரியாது. கூடியிருந்த மனிதர்களின் எள்ளிநகையாடலிலிருந்து அவன் சமூகத்திற்கு வேண்டப்படாதவன் என நினைத்தோம்.
ஆனால் எங்களின் அந்த கொடிய வேலையை முடித்தபின்புதான் அவர் ஓர் உத்தமர் என்பதைக் கண்டுகொண்டோம். அவரின் கைகளையும் கால்களையும் துளைத்துக்கொண்டு செல்கிறபோது, எங்களுக்குள் ஓர் அதிசயம் நடந்தது. எங்கள் பாவக்கறைகள் அந்த மகானின் இரத்தத்தால் கழுவப்பட்டது போன்ற ஒரு புத்துணர்ச்சி எங்களுக்குக் கிடைத்தது.
சுத்தியல் கொண்டு எங்களை ஓங்கி அடித்தபோதும், எங்களால் அவரின் உடலைத் துளைக்க முடியவில்லை; காரணம் அவரின் இரத்த நாளங்களில் அவர் கொண்டிருந்த இலட்சிய வேகம் பாறையைப் போல் உறுதியாக இருந்தது.
ஆம், அவர் உண்மையிலேயே இறைமகன்தான்.
மனிதா! ஆணிகளாகிய நாங்கள் அவரின் உடலை துளைக்கும்போது ஆண்டவரைக் கண்டு கொண்டோம். அவரின் சாயலாக படைக்கப்பட்ட நீ, தொடர்ந்து மற்றவர்களை ஆணிகளால் அறைவதை நிறுத்தி, அயலானில் இறைவனைக் காண்பாயா?

சிலுவை :- யோவான் 19 : 17 - 18

சிலர் வரலாற்றில் தாமாகப் பெருமையைத் தேடிக்கொள்வார்கள்; இன்னும் சிலர் மற்றவர்கள் வழியாக பெருமையைத் தேடிக்கொள்வார்கள். சிலுவையாகிய நான் இரண்டாவது வகையைச் சார்ந்தவன். இயேசு என்னும் வரலாற்று நாயகனால் நான் உயர்ந்த இடத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற சிலுவையானேன்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே என்னில் மனிதர்களை அறைந்து கொலை செய்யும் தண்டனை உரோமைய வழக்கில் இருந்தது. என்னில் அறைந்து கொல்லப்படுதலே சமூகத்தில் மிகவும் கொடூரமானச் சாவாக இருந்தது. இது மிகவும் இழிவானதாகவும் கருதப்பட்டது. நாட்டுத்துரோகம் போன்ற பெரும் குற்றம் செய்த மக்களுக்கு, அதிலும், உரோமையரல்லா மக்களுக்கே இத்தண்டனை வழங்கப்பட்டது. என்னைக்கண்டால் மற்றவர்கள் காறி உமிழும் நிலையில்தான் நான் இருந்தேன்.

மரத்தால் வந்த வினையை மரத்தால் நீக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே ஆண்டவரின் தெரிவும் சிலுவை தெரிவாக இருந்தது. சிரசில் முள்முடி, உடல் முழுவதும் கசையடிகள், களைப்பும் சோர்வும் இயேசுவைச் சூழ்ந்து நிற்க, நானும் அவரது தோள்மீது சுமத்தப்பட்டேன். எனது சுமை அவருக்குப் பெரும் சுமை, ஆனாலும் ''பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள்'' என்று மற்றவர்களுக்குச் சொன்ன அந்த மகான், என்னை வாரி அணைத்து, தாங்கிக் கொண்டார்.

எதற்காக? மனிதனே உனக்காக.
அவரின் இரத்தம் என்மீது பட்டபோது, அது அன்பு நெறியை எனக்குப் புகட்டியது.
கல்வாரியில் அவரின் உடலை என்னோடு ஆணியால் பிணைக்கும்போது, என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனிதத்தை மீட்கவந்த இறைமனிதனை இந்த மனிதர்களே மூன்று ஆணிகளால் என்மீது தொங்க விடுகிறார்களே என்ற கோபம் எனக்குள் ஏற்பட்டது. பொறுத்துக்கொண்டேன். என்னைத்தாங்கி கல்வாரி மலைமட்டும் வந்த உத்தமரை மூன்று மணி நேரங்கள் நான் தாங்கிக்கொள்ளும் பாக்கியம் பெற்றேன்.
மனிதா! மற்றவர்கள் மீது என்னை சுமத்தாதே, இயேசு காட்டிய பாதையில் என்னை சுமந்து அவரின் கல்வாரி பாதையில் பயணிக்க உனக்கு தைரியம் உண்டா?

முடிவு:- மரணம்

பிறப்பவர் எல்லாரும் இறக்க வேண்டும்
இது உலக நியதி
இறப்பவர் எல்லாரும்
மனிதர்களாக இறக்கிறார்களா;
இது மரணத்தின் கேள்வி?

பிறப்புக்கும் இறப்பிற்கும் இடையில் வாழ்வு
இது இறைவனின் கொடை.
இந்தக் கொடையை எல்லாரும்
மனிதப் பண்போடு வாழ்கிறார்களா?
இது வாழ்வின் சிந்தனை.

அன்று,
உலகில் ஒருவர் மரித்தால்
அது ஒரு பேரிழப்பு.
இன்று பல்லாயிரம் மனிதர்கள் ஒன்றாக மரித்தாலும்
அது, நாளிதழில் ஓரமாய்த் தோன்றும் ஒரு செய்தி.
வாழ்வின் மதிப்பு குறைந்து கொண்டு போகிறது
இது வாழ்வின் ஏக்கம்.

மனிதா!
வாழ்வு உன்கையில்
மரணத்தை முன்நிறுத்து.
எப்படியும் வாழலாம் என்ற சிந்தனையைத் தூக்கிப்போடு
இப்படித்தான் வாழவேண்டும் என்று
இறைவன் தந்த வாழ்வை வாழ்ந்து
புது வரலாறு வரைந்து விடு.
இதுதான் சிலுவையின் சிந்தனை.








All the contents on this site are copyrighted ©.