2012-04-04 15:02:33

உயிர்ப்புத் திருநாளையொட்டி, சிரியாவில் அனைத்து தரப்பினரும் ஆயுதங்களைக் களைய அப்போஸ்தலிக்க நிர்வாகியின் வேண்டுகோள்


ஏப்ரல்,04,2012. புனித வாரம் மற்றும் உயிர்ப்புத் திருநாளையொட்டி, சிரியாவில் அனைத்து தரப்பினரும் ஆயுதங்களைக் களைந்து, மக்கள் இந்த புனித நாட்களைக் கொண்டாட வழி செய்யவேண்டும் என்று Aleppoவில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaro வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுதங்களாலும், போர்களாலும் இழப்புக்கள் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றன என்று கூறிய ஆயர் Nazzaro, சமாதானம் மட்டுமே ஆக்கப்பூர்வமான நம்பிக்கை தரும் என்பதால், உயிர்ப்பு நாளையொட்டி ஆயுதங்களையும், போரையும் கைவிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இவ்வாண்டு சிரியாவில் கொண்டாடப்படும் புனித வார நிகழ்ச்சிகள் அனைத்தும் வெளி ஆடம்பரங்கள் ஏதும் இன்றி கொண்டாடப்படும் என்று எடுத்துரைத்த ஆயர் Nazzaro, துன்பத்தில் சிக்கியிருக்கும் சிரியாவின் மக்களுடன் நெருங்கியிருப்பதே இவ்வார நிகழ்வுகளின் மையக் கருத்தாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Cor Unum அமைப்பின் வழியாகவும், சிரியாவின் காரித்தாஸ் அமைப்பின் வழியாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அளித்துள்ள நிதி உதவிகள் பற்றி கூறிய ஆயர் Nazzaro, முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan அவர்களின் பரிந்துரைகளை அனைத்துத் தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும் என்ற சிறப்பு வேண்டுகோளை விடுத்தார்.









All the contents on this site are copyrighted ©.