2012-04-03 15:39:42

திருப்பீட பல்சமய உரையாடல் அவை – இளையோர், நீதியிலும் அமைதியிலும் வளரக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்


ஏப்.03,2012. இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகள், அமைதியில் வாழவும், அமைதியை ஏற்படுத்துகின்றவர்களாகச் செயல்படவும் ஒன்றிணைந்து உழைக்குமாறு கிறிஸ்தவர்களுக்கும் புத்தமதத்தினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.
Vesak என்ற புத்தமதத்தினரின் முக்கிய விழாவையொட்டி உலகெங்கும் வாழும் புத்தமதத்தினருக்கு இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, நீதி மற்றும் அமைதியின் கருவிகளாக இளையோர் மாறுவதற்கு இவ்விரு மதத்தினரும் தங்களின் எடுத்துக்காட்டான வாழ்வு மற்றும் போதனைகள் மூலம் வழிகாட்டிகளாக அமையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று உலகெங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் அருகருகே அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதால், இளையோர் மற்ற மதத்தினரைப் புரிந்து மதித்து நடப்பதற்கு அவர்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டிய தேவை குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் அச்செய்தி கூறுகிறது.
அனைத்துச் சமூகங்களுக்கும் மூலதனமாக இருக்கும் இளையோர், தங்களது உண்மையான வாழ்வு மூலம், மனிதவாழ்வு, மரணம், நீதி, அமைதி, துன்பத்தின் பொருள், நம்பிக்கைக்கான காரணம் ஆகிய அடிப்படை கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுமாறு நம்மை ஊக்கப்படுத்துகின்றனர், இவ்வாறு உண்மையாம் இறைவனை நோக்கிய திருப்பயணத்தில் நாம் முன்னேற உதவுகிறார்கள், இவர்கள் தங்களது கேள்விகளால் மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவிக்கிறார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது.
வேசாக் விழாவுக்கான இச்செய்தியில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran மற்றும் செயலர் பேராயர் Pier Luigi Celata கையெழுத்திட்டுள்ளனர்.
புத்தரின் பிறப்பு, அவர் விழிப்புணர்வு பெற்றது, அவரின் இறப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வேசாக் விழா, ஏப்ரல் 8ம் தேதி ஜப்பானிலும், மே 10ம் தேதி கொரியா, சீனா, தாய்வான், வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், மே 17ம் தேதி தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, மியான்மார், லாவோஸ் ஆகிய நாடுகளிலும் சிறப்பிக்கப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.