2012-04-03 15:43:12

கொலம்பியாவில் பிணையல் கைதிகள் விடுதலை குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி


ஏப்.03,2012. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் FARC புரட்சிக்குழுவின் பிணையல் கைதிகளில் பத்துப் பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானப் பணிக்குழு மற்றும் கொலம்பியாவின் அமைதிப்பணிக்குழுவின் பிரதிநிதிகளிடம் இத்திங்களன்று இப்பிணையக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். பிரேசில் நாட்டு இராணுவ ஹெலிகாப்டர் இவர்களைக் காட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.
இவ்விடுதலை குறித்து மகிழும் அனைத்து கொலம்பியா மக்களுடன் ஆயர்களாகிய தாங்களும் மகிழ்வதாக உரைத்த Bogota பேராயர் Ruben Salazar Gomez, FARC புரட்சிக்குழுவிடம் இருக்கும் அனைத்துப் பிணையல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதேசமயம், FARC புரட்சிக்குழுவினர் தங்களிடமுள்ள அனைத்துப் பிணையல் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்து, அந்நாட்டில் கடத்தல் குற்றம் முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கு உதவுமாறு கேட்டுள்ளார் பேராயர் Salazar Gomez.
காவல்துறை மற்றும் இராணுவத்தின் உறுப்பினர்கள் உட்பட பிணையலில் இருந்த இந்த பத்துப் பேரில் சிலர் 14 ஆண்டுகள் வரை பிணையலில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.