2012-04-02 15:58:07

வாரம் ஓர் அலசல் – மாற முடியாதா?


ஏப்.02,2012. RealAudioMP3 உலகில் பண்பாட்டுக் கலாச்சாரம் வளராத காலம் அது. விலங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மேற்குலக அறிஞர் ஒருவர், மனித மாமிசத்தை உண்ணும் ஒரு கும்பலிடம் சிக்கிக் கொண்டார். அந்த மேற்குலக வெள்ளையரை உயிரோடு வறுத்துத் தின்பதற்காக அந்தக் கும்பல் காட்டுக்குள்ளே கூச்சலிட்டுக் கொண்டே தலைவரிடம் இழுத்துச் சென்றது. அங்குத் தலைவர் அருகில், தலைமுடியைச் சரியாக வெட்டி நாகரீகமான மனிதர் போன்று ஆடையணிந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும், பயந்து நடுங்கிக் கொண்டிருந்த அந்த வெள்ளையருக்குப் புது நம்பிக்கை பிறந்தது. ஒருவேளை இவருக்கு ஆங்கிலம் தெரிந்தால் நாம் தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த நாகரீக உடையணிந்த மனிதர், அவரிடம் ஆங்கிலத்தில் பேசினார். “உனது கடைசி ஆசை என்னவென்று சொல், அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன், இங்கே இருக்கிறவர்களுக்கு எந்த நடைமுறை ஒழுங்குகளும் தெரியாது” என்றார். அப்போது அந்த வெள்ளையர், “நீ ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறாய், நாகரீக உலகில் வாழ்ந்திருக்கிறாய், இவையெல்லாம் உன்னிடம் எந்த மாற்றத்தையும் செய்யவே இல்லையா?” எனக் கோபமாகக் கேட்டார். அதற்கு அவர், “தனது உடலை உலுக்கிக் கொண்டு, என்ன அப்படிக் கேட்டு விட்டாய்?, நான் எவ்வளவு பண்பாடு உள்ள மனிதராக மாறி விட்டேன்!, இவர்கள் போன்று அநாகரீகமாக நான் நடந்து கொள்வதில்லை. இப்போதுகூட உன்னை வறுத்த பின்பு, கரண்டி, கத்தி, முள் இவைகளைப் பயன்படுத்தித்தான் சாப்படுவேன், எனது கை விரல்களைப் பயன்படுத்தமாட்டேன், இப்படி நான் நிறையவே மாறிவிட்டேன்” என்றார்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப் பொழுதும், தாவரங்களில், உயிரினங்களில், விண்வெளியில், மனிதரில் என எல்லாவற்றிலும் மாற்றங்கள் நடைபெறுகின்றன. ஆயினும், மனிதரைச் சாப்பிடும் இந்த மனிதர் சொன்னது போன்ற மாற்றங்களை, மாற்றங்கள் என்றோ, மனிதர் மாறிவிட்டனர் என்றோ நாம் கணக்கில் எடுக்க முடியாது. அதிவேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்னென்ன மாற்றங்களைச் செய்து வருகின்றது என்பதற்குக் கடந்த வாரத்தில் (மார்ச்29,2012) வெளியான ஒரு தகவலே சான்றாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டு வெர்ஜீனியா மாநிலத்தில் 37 வயதான Richard Lee Norris என்பவர், புதிய முகத்தைப் பெற்றுள்ளார் என்று வாசித்தோம். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துப்பாக்கிக் குண்டு விபத்தில் இவரது மூக்கும் வாய்ப் பகுதியும் முற்றிலும் சிதைந்தன. பற்களை இழந்தார். நாக்கின் ஒரு பாகம் மட்டுமே இருந்தது. கண் பார்வையிலும் குறைபாடு இருந்தது. அவரை எல்லாரும் விநோதமாகப் பார்த்ததால், இரவு நேரங்களில் மட்டுமே வெளியே அவர் சென்று வந்தார். ஆயினும், உறுப்புதானம் செய்த வேறொருவருடைய, மேல்தாடை, கீழ்தாடை, பற்கள், மூக்கு, நாக்கின் எஞ்சிய பகுதி மற்றும் முகத்திசுக்களைப் பெற்று தற்போது புதிய முகத்தைக் கொண்டுள்ளார். தற்போது Norris டம் அவரது முகச்சாயல் இல்லை. அவருக்குப் புதிய ஒரு முகம் கிடைத்துள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். Norris க்கு நடத்தப்பட்ட இந்த 36 மணி நேர அறுவை சிகிச்சை, உலகில், அதிகச் செலவுடன் அதிக நேரம் நடத்தப்பட்ட முதல் அறுவை சிகிச்சை என்று சொல்லப்படுகிறது.
தோற்றங்கள் மாறுகின்றன. பழக்கவழக்கங்கள் மாறுகின்றன. சூழ்நிலைகள் மாறுகின்றன. செயல்பாடுகள் மாறுகின்றன. அரசுகளும், அரசியல் தலைவர்களும் மாறுகின்றனர். தமிழக முதலமைச்சரில் இப்போது ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தை நாம் அறிவோம். தொழிற்வளர்ச்சியடைந்த 9 நாடுகளில் ஒன்றான இத்தாலி தற்போது கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. 4 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லையென கடந்த வாரத்தில் தீக்குளிப்புத் தற்கொலைகள் இடம் பெற்றன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பலர் வேலையை இழந்துள்ளனர். உலகில் உயர்ந்திருந்த பணக்கார மேற்கு சரியத் தொடங்கியிருக்கிறது. உலகில், மக்களுக்குத் துன்பம் தரும் மாற்றங்கள் ஒரு பக்கமும், இன்பம் தரும் மாற்றங்கள் இன்னொரு பக்கமும் இடம் பெற்று வருகின்றன. இஞ்ஞாயிறன்று சில நாடுகளின் அரசியலில் இடம் பெற்றுள்ள மாற்றங்கள், நம்மால் நன்னிலைக்கு மாற முடியாதா, நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளன. மியான்மாரில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் Aung San Suu Kyi யின் சனநாயக ஆதரவுக் கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அந்நாட்டில் இடைத்தேர்தல் நடந்த 45 தொகுதிகளில் 44 தொகுதிகளில் Aung San Suu Kyi யின் கட்சி போட்டியிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான காலத்தை வீட்டுக்காவலில் செலவழித்துள்ள Aung San Suu Kyi யின் கட்சி அடைந்துள்ள அமோக வெற்றியை அறிவித்துள்ள ஊடகங்கள், மியான்மார் மாறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. மியான்மாரில் பல ஆண்டு இராணுவ ஆட்சி முடிந்து, இராணுவத்தின் ஆதரவுடன் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் நல்மாற்றங்களுக்கு வித்திடும் என்ற நம்பிக்கையையே நமக்குக் கொடுத்துள்ளன.
ஏறக்குறைய ஓராண்டளவாக சண்டை நடைபெற்று வரும் சிரியாவில், எதிரணிக் குழுவுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று இஞ்ஞாயிறன்று செய்தி வெளியானது. சிரியாவில் அரசியல் மாற்றங்களை ஆதரிக்கும் நாடுகளும், இந்த எதிரணிக் குழுவை சிரியாவின் அனைத்து மக்களின் நியாயமானப் பிரதிநிதிகளாக அங்கீகரித்திருக்கின்றன. சிரியா அரசு உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும், அந்நாட்டின் கலாச்சாரச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா.அதிகாரிகள் கடந்த வாரத்தில் அழைப்பு விடுத்தனர RealAudioMP3 ். தற்போது சிரியா குறித்து வெளியாகும் செய்திகள் நல்மாற்றங்களுக்குப் பாதை அமைப்பதாகத் தெரிகின்றன. நம்மால் மாற்றங்களைக் கொணர முடியும், நம்மால் மாற முடியும் என்று நெஞ்சைத் தட்டிச் சொல்ல வைக்கின்றன இந்த நிகழ்வுகள்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கியூபா நாட்டில் திருப்பயணம் இந்த மார்ச் 27ம் தேதி, அதாவது கடந்த செவ்வாயன்று மேற்கொண்ட போது அந்நாட்டு அரசுத்தலைவர் Raúl Castroவை, அவரது மாளிகையில் 40 நிமிடங்களுக்கு மேலாகத் தனியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, புனித வெள்ளிக்கிழமையை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இயேசுவின் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் சிறப்பாகத் தியானிக்கும் புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் செல்வதற்கு வசதியாக இந்தச் சலுகையைக் கேட்பதாகத் திருத்தந்தை தெரிவித்தார். திருத்தந்தையின் இவ்வேண்டுகோளை ஏற்று, இவ்வாரப் புனித வெள்ளியை தேசிய விடுமுறையாக கியூபா கம்யூனிச அரசு அறிவித்துள்ளது. “Granma,” என்ற கியூபாவின் அதிகாரப்பூர்வத் தினத்தாளில் இச்செய்தி இச்சனிக்கிழமை வெளியானது. ஆயினும், புனித வெள்ளியை நிரந்தரமாகத் தேசிய விடுமுறையாக்குவது குறித்து அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்றும் அத்தினத்தாளில் சொல்லப்பட்டிருந்தது. கியூபாவில் 1959ம் ஆண்டில் கம்யூனிச ஆட்சி தொடங்கிய பின்னர், அந்நாட்டுப் புரட்சியாளர்கள் அனைத்துச் சமய விடுமுறைகளையும் இரத்து செய்தனர்.
கியூபா அரசு, இவ்வாண்டு புனித வெள்ளிக்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவித்திருப்பது குறித்து திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தியும் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். கியூபா அதிகாரிகள், திருத்தந்தை 16ம் பெனடிக்டின் வேண்டுகோளை இவ்வளவு விரைவாக நிறைவேற்றியிருப்பது “நிச்சயமாக, நல்ல நேர்மறையான அடையாளம்” என்றும் அவர் கூறினார். அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், இறந்ததன் ஏழாம் ஆண்டை ஏப்ரல் 2ம் தேதி இத்திங்களன்று நாம் நினைவுகூருகிறோம். அவரும் 14 ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட போது, கிறிஸ்மஸ் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதையும் கியூபா கம்யூனிச அதிகாரிகள் நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. கியூபாவில் ஏற்பட்டு வரும் நல்மாற்றங்களும், நம்மால் மாற முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
800 ஆண்டுகளுக்கு முன்னர், குருத்தோலை ஞாயிறன்று இத்தாலியின் அசிசி நகர் புனித கிளாராவில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து, Assisi-Nocera Umbra-Gualdo Tadino மறைமாவட்ட ஆயர் Domenico Sorrentino வுக்கு இஞ்ஞாயிறன்று கடிதம் அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கிளாரா, தனது 18 வது வயதில் கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்பட்டு தனது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறினார், இதில் மகிழ்வு கண்டார், இன்றைய இளையோரும் கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு இஞ்ஞாயிறு மறையுரையில் அழைப்பு விடுத்தார். RealAudioMP3
“உலகம் காட்டும் பல்வேறு ஏமாற்று வழிகளில் சென்று நம் இளையோர் மதி இழந்து போகாமல், நல்ல கொள்கைகளைப் பின்பற்றும் அறிவாளிகளாக மாற வேண்டும் என இறைவனை மன்றாடுவோம்”. இவ்வாறு நமது இஞ்ஞாயிறு சிந்தனையில் அருள்தந்தை எல்.எக்ஸ்.ஜெரோம் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார். அன்பர்களே, இயேசுவின் திருப்பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பேருண்மைகளைச் சிறப்பாக தியானிக்கும் இவ்வாரத்தில், நம் ஒவ்வொருவரிலும் ஏதாவது ஒரு நல்மாற்றமாவது நிகழ வேண்டும். நல்மாற்றத்திற்கான நல்சிந்தனை மனதில் ஆழப் பதிய வேண்டும். தனிமனித மாற்றமே சமுதாய மாற்றம். “நாட்டில் ஊழலை ஒழிக்க, தனிமனிதர் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்” என, தமிழக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயந்தி அவர்கள், கடந்த வாரத்தில் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கத்தில் பேசினார். ஆம். நம்மால் மாற முடியும். எதில், எப்படி மாற முடியும் என்பது அவரவருக்குத்தான் வெளிச்சம்.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் சொன்னார் – பொறுமையினும் சிறந்த தவமில்லை, திருப்தியினும் உயர்ந்த இன்பமில்லை. கருணையினும் பெரிய அறமில்லை. ஆசையினும் பெரிய தீமை இல்லை. மன்னித்தலினும் ஆற்றல்மிக்க ஆயுதம் வேறில்லை என்று.
ஒவ்வொரு மதமும் நமது மாற்றத்திற்கான எத்தனையோ நற்போதனைகளைக் கொண்டுள்ளது. இதயத்திலிருந்து சிந்தித்து, இதயத்திலிருந்து சுவாசித்து, இதயத்திலிருந்து பேசி, இதயத்தில் வாழும் போது நல்மாற்றம் நிகழும். கடை ஒன்றில் தராசில் பொருள்களை வைக்கும் போதெல்லாம் தட்டு ஒரு பக்கமாகச் சாய்ந்தது. ஆனால் படிக்கல் இருக்கும் தட்டு மேலேயே நின்றது. இதை உருளைக் கிழங்குகளும் வெங்காயமும் உற்றுக் கவனித்தன. இது கொடுமை... கொடுமை என்று கத்தியது உருளைக்கிழங்கு. வெளியே தலைநீட்டிக் கொண்டிருந்த வெங்காயமோ, இது பகல் கொள்ளை...பச்சைத் திருட்டு என்று வயிற்றெரிச்சலைக் கொட்டியது. பின்னர் இரண்டும் சேர்ந்து குரலெழுப்பின-தராசை முதலில் எடைபோடு என்று. (கவிக்கோ காசி ஆனந்தன்) நாமும், மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் எனக் கத்திக் கொண்டே இருக்காமல் அந்த மாற்றத்தை நம் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்துவோம். நம்மால் மாற முடியும்.









All the contents on this site are copyrighted ©.