2012-04-02 15:47:07

மியான்மார் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இடம்பெறவிருப்பதே அந்நாட்டில் ஒரு பெரும் முன்னேற்றம் - ஆயர் Raymond Saw Po Ray


ஏப்ரல்,02,2012. மியான்மாரில் நடைபெற்ற இடைத்தேர்தலின் பயனாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இடம்பெறும் என்பதே அந்நாட்டில் ஒரு பெரும் முன்னேற்றம் என்று மியான்மார் ஆயர் ஒருவர் கூறினார்.
மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயின் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கும் நிலையிலேயே Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Raymond Saw Po Ray இவ்வாறு கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் Suu Kyi மக்களின் நலனுக்காக உழைப்பார் என்பதில் ஐயமில்லை என்று கூறிய ஆயர் Po Ray, அடுத்து வரும் ஆண்டுகளில் நாட்டில் ஒப்புரைவையும் அமைதியையும் கொணர்வதே Suu Kyiயின் முக்கியமான பணியாக அமைய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.
NLD (National League for Democracy) எனப்படும் தேசிய குடியரசு கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தியைக் கேட்ட அக்கட்சியின் தலைவர் Suu Kyi, இந்த வெற்றி மக்கள் அடைந்த வெற்றி என்றும் மியான்மார் நாட்டில் இது புதியதொரு வரலாற்றை உருவாக்கும் வாய்ப்பு என்றும் கூறினார்.
இந்த வெற்றிக்காகப் பல ஆண்டுகள் காத்திருந்த மக்கள் அத்துமீறியச் சொற்களாலும், செயல்களாலும் பிற கட்சியினரைப் புண்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன என்ற ஆபத்தைச் சுட்டிக்காட்டிய அரசியல் தலைவர் Suu Kyi, இது வெற்றியைக் கொண்டாடும் நேரமல்ல, மாறாக, ஒப்புரவை நோக்கி இந்த நாட்டை அழைத்துச் செல்லும் நேரம் என்று வலியுறுத்திக் கூறினார்.
மியான்மார் தேர்தல் முடிவுகளைப் பல நாடுகள் மகிழ்வுடன் வரவேற்றுள்ளன. சீர்திருத்தங்களை நோக்கிச் செல்லும் ஒரு பாதையைத் தேர்ந்துள்ள மியான்மார் அரசையும், மக்களையும் வாழ்த்திப் பேசினார் அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் Hillary Clinton. மியான்மார் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பல பொருளாதாரத் தடைகளை நீக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளது.
மேலும், தற்போதைய வெற்றி மூலம் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயின் கட்சி பாராளு மன்றத்தில் இடம் பெறும் என்றாலும், 2015ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.