2012-03-31 15:14:37

மதியிறுக்கம் நோயாளிகள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் களையப்பட பான் கி மூன் அழைப்பு


மார்ச்31,2012. Autism என்ற மதியிறுக்கம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் ஏற்றுக்கொள்ள முடியாதப் பாகுபாடு, பழிகூறல்கள், தனிமை ஆகியவற்றை நிறுத்துவதற்கு உலகளாவிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
மூளையின் சாதாரண வளர்ச்சியின்மையால் ஏற்படும் Autism என்ற நோய், ஒரு தனிப்பட்ட பகுதியை அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டை மட்டும் தாக்கவில்லை, உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதனை ஒழிப்பதற்கு பன்னாட்டு அளவில் நடவடிக்கைகள் தேவை என்றும் பான் கி மூன் கூறினார்.
வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக Autism என்ற மதியிறுக்கம் நோய் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், இந்நோயாளிகளும் சம உரிமை பெற்ற குடிமக்களே, இவர்கள் அனைத்து மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் அனுபவிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
2007ம் ஆண்டு டிசம்பரில், ஐ.நா.பொது அவை, ஏப்ரல் 2ம் தேதியன்று Autism விழிப்புணர்வு தினம் உலகில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானித்தது.
ஒருவரின் மூளை வளர்ச்சி பாதிப்பால், அவரின் மக்கள் தொடர்புத் திறன், சமுதாயத்தில் அவரின் செயல்பாடுகள், அவர் ஆர்வம் கொள்ளும் துறைகள், அவரின் நடத்தை போன்றவை இயல்பிற்கு மாறாக அமைகின்றன. இத்தகைய பாதிப்பு, Autism அதாவது மதியிறுக்கம் நோய் என்று அழைக்கப்படுகின்றது. இந்நோய், பொதுவாக குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குமுன் பாதிக்கும். இது ஒரு நோயல்ல, மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.