2012-03-31 15:24:45

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920… குருத்து ஞாயிறு சூறாவளி 1920. 92 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவின் மூன்று பகுதிகளில் குருத்து ஞாயிறன்று வீசிய சூறாவளிக்காற்று, மழை, புயல் இவைகளால் ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதேபோல், 1965ம் ஆண்டும் குருத்து ஞாயிறன்று, மக்கள் ஞாயிறு வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தபோது சூறாவளி வீசியதாகச் சொல்லப்படுகிறது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் வரும் ஒரு செய்திதான். இதே மாதங்களில்தான் தவக்காலத்தின் இறுதி நாட்களும் இடம்பெறுகின்றன. தவக்காலத்தின் ஆரம்பம் வசந்த காலத்துடன் இணைந்து வருவதை நாம் சிந்தித்ததுபோல், தவக்காலத்தின் இறுதி நாட்கள் சூறாவளி வீசும் காலம் என்று சிந்திப்பதும் பயனளிக்கும். குருத்து ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம்.

வரலாற்றில், முதல் குருத்துஞாயிறு நடந்த போது சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. காற்று வடிவத்தில் வந்த சூறாவளி அல்ல, கடவுள் வடிவத்தில், கடவுளின் திருமகன் வடிவத்தில் வந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை வேரோடு சாய்க்கும், பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள், எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றின என்பதை உணரலாம்.
இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. “ஏற்பாடு செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா நாட்களில் எருசலேமில் இப்படி தானாகவே ஏற்படும் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் பலவித பயங்களை
உருவாக்கின. இயேசுவைச் சுற்றி எழுந்த இந்த ஊர்வலமும் அதிகார வர்க்கத்தை ஆட்டிப் படைத்திருக்க வேண்டும்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம்... எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தது. இதைத் தொடர்ந்து, அவர் அந்த மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். எனவே, இந்த குருத்து ஞாயிறு, அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!

குருத்து ஞாயிறு துவங்கி, உயிர்ப்பு ஞாயிறு வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருஅவை புனிதவாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசுவின் உலக வாழ்வின் இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே, அதனால்... அந்த இறுதி நாட்களில் நடந்தவைகளில் புனிதம் எதுவும் வெளிப்படையாகக் காணப்படவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக் கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். மற்ற நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலை போனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும் தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில் அந்த இளைஞனை அடித்து, நொறுக்கி ஒரு கந்தல் துணி போல் சிலுவையில் தொங்க விட்டனர்.

நான் இப்போது பட்டியலிட்டவைகளில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் துன்பப்படக் கூடியவர்தான். அதுவும் அன்புக்காக எந்த துன்பத்தையும், எவ்வளவு துன்பத்தையும் ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப் பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னாரே, அதேபோல் இந்தப் புனிதவாரம் முழுவதும் இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்வுகளும் புனிதத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்த கால்வாய்கள். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். புனிதவாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை, அந்தச் சிலுவையில் அறையப்பட்ட இயேசு. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைகளிலேயே மிகவும் கொடூரமானது சிலுவை மரணம். மிகவும் கீழ்த்தரமான குற்றவாளிகளே சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார்கள். எனவே, சிலுவை என்பதே ஒரு பெரும் அவமானச் சின்னம். அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை இன்று நாம் கோவில்களின் உச்சிகளிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசுவின் உருவம் கோடான கோடி மக்களின் வாழ்வில் சூறாவளிகளை உருவாக்கி, முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. மீட்பைக் கொணர்ந்துள்ளது.

William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய “Once Upon a Gospel: Inspiring Homilies and Insightful Reflections” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில் ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்த குரலில் கேலி செய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் எல்லை மீறிச் சென்றது.
ஒரு முறை ஞாயிறு திருப்பலிக்கு முன், கோவிலின் பங்குதந்தை பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது கூறும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்குச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப் பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை.' என்று உரத்தக் குரலில் நீ கத்த வேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை அவரது வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்கு குரு இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்." என்று கூறினார்.
இம்முறை இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். கைகளை உயர்த்தினார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் தெறித்தது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்று சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன?

அந்த இளைஞனை ஆட்கொண்டு அவர் வாழ்வை மாற்றிய இறைவன் இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம். ஒவ்வோர் ஆண்டும் குருத்து ஞாயிறன்று திருஅவை இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. இந்த இளையோர் நாள் முட்டாள்கள் தினம் என்று கூறப்படும் ஏப்ரல் முதல் தேதியன்று வந்திருப்பது நமக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும். உலகம் காட்டும் பல்வேறு ஏமாற்று வழிகளில் சென்று நம் இளையோர் மதி இழந்து போகாமல், நல்ல கொள்கைகளைப் பின்பற்றும் அறிவாளிகளாக மாறவேண்டும் என்று மன்றாடுவோம். அறிவை இழப்பதற்கு ஒரு நொடி போதும், அறிவைப் பெறுவதற்கோ ஆண்டுகள் பல வேண்டும். அந்தப் பொறுமையை இளையோரும், முதியோரும் பெற வேண்டுவோம்.

இறுதியாக ஒரு சிந்தனை: இயேசு என்ற இந்த எளிய மன்னன் எருசலேமில் நுழைவதைக் குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகளைக் கேட்போம்.

செக்கரியா 9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

போர்க்கருவிகள் அனைத்தும், முக்கியமாக அணு ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். அந்தக் கனவுகளுக்கு எதிராக அணு உலைகளை அமைக்கும் சக்திகளுடன் போராட முடியாமல் தவிக்கிறோம். இதே கனவுகளும் போராட்டமும் இயேசுவின் காலத்திலும் இருந்தன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.