2012-03-29 16:36:47

திருத்தந்தை - கியூபாவும் உலகும் மாற்றம் பெற வேண்டும்


மார்ச்29,2012. ஆண்டவராம் கடவுளே, உமது மகிமைமிகு பெயர் போற்றப்படுவதாக என்ற தானியேல் புத்தக வாழ்த்தொலிகள், இன்றைய திருவழிபாட்டில் எதிரொலிக்கின்றன. பாபிலோனிய மன்னரால் துன்புறுத்தப்பட்ட மூன்று இளைஞர்கள் தங்கள் மனசாட்சியையும் விசுவாசத்தையும் மறுதலிப்பதற்குப் பதிலாக மரணத்தை எதிர் கொள்வதற்குத் தயாராய் இருந்தார்கள். இந்த உலகின் மற்றும் வரலாற்றின் ஆண்டவர் தங்களைக் கைவிட மாட்டார் என்பதில் ஆழமான உறுதி கொண்டிருந்தார்கள். உண்மையில் கடவுள் தமது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடமாட்டார், ஒருபோதும் மறக்கமாட்டார். அவர் நமக்கு மேலே இருந்து தமது வல்லமையால் நம்மை மீட்கிறார். அதேசமயம், அவர் தமது மகன் இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு வெகு அருகில் இருக்கிறார். தம்மை தந்தையின் மகனாகவும் மீட்பராகவும் வெளிப்படுத்தும் இயேசு மட்டுமே உண்மையையும் உண்மையான சுதந்திரத்தையும் நமக்கு காட்ட முடியும். உண்மைக்காக மனிதன் ஆவல் கொள்கிறான். இந்த உண்மைக்கான தேடல், உண்மையான சுதந்திரத்தைச் செயல்படுத்துவதில் உள்ளது. எல்லாருக்கும் பொருந்தக்கூடிய ஓர் உண்மை இருக்கின்றது என்பதை மனிதர் அறியக்கூடிய திறனைக் கொண்டுள்ளனர் அல்லது அதனை மறுதலிக்கவும் செய்கின்றனர். இந்த மனப்பான்மை இதயங்களை மாற்றி, அவர்களைப் பிறரிடமிருந்து தூரமாக வைக்கின்றது. மற்றொரு பக்கம், இந்த உண்மைக்கானத் தேடலுக்குத் தவறாக விளக்கம் கூறுவோரும் உள்ளனர். இது அறிவற்ற தன்மைக்கும் அடிப்படைவாதத்துக்கும் இட்டுச் சென்று அவர்களின் உண்மைக்குள்ளே அவர்களை முடக்கி, அதைப் பிறர்மீதும் திணிக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் குருட்டுச் சதிசேயர் போன்றவர்கள். இயேசுவை சிலுவையில் அறையும் எனக் கத்தியவர்கள் போன்றவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, மனித சமுதாயத்தை விஞ்சி நிற்கும் உண்மை, சுதந்திரத்தை அடைவதற்கு தவிர்க்கமுடியாத கூறாகும். ஏனெனில் அதில்தான் ஒழுக்கநெறிகளு்ககான அடித்தளத்தை நாம் கண்டு கொள்கிறோம். இந்த ஒழுக்கநெறி விழுமியங்களைக் கொண்டுள்ள கிறிஸ்தவம் அவற்றை யார் மீதும் திணிப்பதில்லை, ஆனால் நம்மை விடுதலையாக்கும் உண்மையை அறிவதற்கு கிறிஸ்து விடுக்கும் அழைப்பை முன்வைக்கிறது என்ற திருத்தந்தை, அன்பு நண்பர்களே, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குத் தயங்க வேண்டாம். கடவுள் மற்றும் மனித சமுதாயம் பற்றிய உண்மையை அவரில் கண்டு கொள்கிறோம் என்று சொல்லி மேலும் மறையுரையைத் தொடர்ந்தார்.
கியூபாவில் திருஅவை, தனது விசுவாசத்தை வெளிப்படையாகவும் பொதுவாகவும் வெளிப்படுத்தும் முக்கியமான பணியைச் செய்வதற்குச் சுதந்திரம் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியோடு கூற வேண்டும். கியூபா சமுதாயம் முழுவதற்கும் உண்மையாகவே பணி செய்வதற்கான இப்பாதையை அரசு அதிகாரிகள் வலுப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். குடிமகனாகவும் மத நம்பிக்கையாளராகவும் இருக்கும் மனிதரின் ஒன்றிப்பை சமய சுதந்திரம் எடுத்துக் காட்டுகின்றது. இந்தச் சுதந்திரம், சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு அவர்கள் சட்டரீதியாக செயல்பட உதவுகின்றது. சமய சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது, சமூகப்பிணைப்புக்களை ஒருங்கிணைக்கிறது. நல்லதோர் உலகுக்கான நம்பிக்கையைப் பேணுகின்றது. அமைதி மற்றும் நல்லிணக்க முன்னேற்றத்துக்குச் சாதகமான வழிகளை உருவாக்குகிறது. அதேசமயம், வருங்காலத் தலைமுறைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கின்றது. திருஅவை இந்த மனித உரிமைகளை வலியுறுத்தும் போது, அது தனக்காக எவ்வித சிறப்புச் சலுகைகளையும் கேட்கவில்லை. ஆனால் அது தனது விண்ணக நிறுவுனருக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறது. கிறிஸ்து இருக்கும் இடத்தில் மனித சமுதாயம் மிகுந்த மனிதாபிமானமுள்ளதாக மாறும். இதனாலே திருஅவை தனது பள்ளிகள் நிறுவனங்கள் போதனைகள் மறைக்கல்வி போன்றவை மூலம் சான்று பகர முயற்சிக்கின்றது. திருஅவை தான் கொண்டிருக்கும் கிறிஸ்துவை மற்றவர்களும் பங்குதாரர்களாக்கிக் கொள்வதற்காக வாழ்கிறது. அருள்தந்தை வரேலா, உண்மையான சமுதாய சீர்திருத்தத்தின் பாதையை நமக்கு அருளுகின்றார். கியூபாவும் உலகும் மாற்றம் பெற வேண்டும். ஆயினும், ஒவ்வொருவரும், உண்மையைத் தேடி, அன்பின் பாதையைத் தேர்ந்து, ஒப்புரவையும் சகோதரத்துவத்தையும் விதைத்தால் மட்டுமே இந்த மாற்றம் நடைபெறும். தவறின் இருளை அழிக்கும் கிறிஸ்துவின் ஒளியில் நடப்போம். கடவுளுக்கு உறுதியுடனும் தாராளத்துடனும் சுதந்திரத்துடனும் நாம் செவிமடுக்க அவரின் உதவியைக் கெஞ்சுவோம் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.