2012-03-29 15:57:25

தலத் திருஅவையின் உதவியால், எல் சால்வதோர் நாட்டில் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன


மார்ச்,29,2012. எல் சால்வதோர் நாட்டில் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையே ஒப்புரவு உருவாக தலத் திருஅவை பெரிதும் உதவியுள்ளது என்று அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறினார். இந்த ஒப்புரவைத் தொடர்ந்து, நாட்டில் நடைபெறும் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன என்று அமைச்சர் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
எல் சால்வதோர் நாட்டில் உள்ள Mara Salvatrucha, La Mara 18 என்ற இரு வன்முறை கும்பல்களின் தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவ்விரு தலைவர்களையும் அண்மையில் சந்தித்த அந்நாட்டு ஆயர் Fabio Colindres, இவ்விரு தலைவர்களையும் ஒப்புரவாக்கியதன் மூலம் இவ்விரு கும்பல்களும் தற்போது வன்முறைகளை நிறுத்தியுள்ளன.
ஒவ்வொரு நாளும் 14 அல்லது 15 கொலைகள் நடைபெற்று வந்த எல் சால்வதோர் நாட்டில், இவ்விரு தலைவர்களின் ஒப்புரவிற்குப் பிறகு, ஒரு நாளில் அதிகப் பட்சம் 5 கொலைகளே நடைபெறுகின்றன என்று கூறிய பாதுக்காப்புத் துறை அமைச்சர் David Munguia, இந்த மாற்றத்தை உருவாக்கக் காரணமான ஆயருக்கும், தலத் திருஅவைக்கும் தன் நன்றியை எடுத்துரைத்தார்.
ஆயரின் இந்த முயற்சி நிரந்தரமான அமைதியைக் கொணர வாய்ப்பில்லை என்று ஒரு சில அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் கூறியுள்ளன.
உலகில் சராசரியாக 10,000 மக்களில் 8.8 கொலைகள் நிகழ்கின்றன என்றும், எல் சால்வதோர் நாட்டிலோ 10,000 பேருக்கு 60 கொலைகள் வீதம் நடைபெறுகின்றது என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.