2012-03-29 15:56:15

குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்கவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்


மார்ச்,29,2012. இலங்கையில் கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது என்றும், குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்குவதற்கு அன்னையருக்கு அனைத்து வகையிலும் வழிகாட்ட வேண்டும் என்றும் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார்.
கருவில் உருவானது முதல் அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் இரஞ்சித், தவக்காலத்தில் திரட்டப்படும் காணிக்கைகள் பிறக்காத குழந்தைகளுக்கான நிதி என்ற பெயரில் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
"குழந்தைகளின் வாழ்வுரிமையைக் காப்பதற்கு" என்ற மையக் கருத்துடன் கொழும்பு உயர் மறைமாவட்டமும், காரித்தாஸ் அமைப்பும் தவக்காலத்தில் துவங்கியுள்ள இந்த முயற்சியால் பல உயிர்கள் காக்கப்படும் என்று உயர்மறைமாவட்டத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இலங்கை அரசு கருக்கலைப்பைச் சட்டமயமாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ள இந்த நிலையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மேற்கொண்டுள்ள எதிர்ப்பின் ஓர் அங்கமாக இந்த முயற்சியும் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.