2012-03-28 15:57:44

சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


மார்ச்,28,2012. சிரியாவின் Homs நகரில் தொடரும் வன்முறைகளிலிருந்து தப்பியோடும் கிறிஸ்தவர்கள் தலத் திருஅவையின் உதவிகளைப் பெற்றுவந்த போதிலும், இன்னும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி எந்த உறுதியும் இல்லாமல் வாழ்கின்றனர், அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்ப்பது மிக அவசரமானத் தேவை என்று Aleppo ஆயர் Antoine Audo கூறினார்.
கடந்த ஆறு வாரங்களாக சிரியாவின் Homs நகரிலிருந்து பெருமளவில் வெளியேறிவரும் கிறிஸ்தவர்களுக்கு Aid to the Church in Need பிறரன்பு அமைப்பின் நிதி உதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறதென்றும், இன்னும் பிற உதவிகள் அவசரகால அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்றும் இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Audo எடுத்துரைத்தார்.
இதற்கிடையே சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்புப் பிரதிநிதி ராதிகா கூமாரசாமி கூறியுள்ளார்.
ஐ.நா. அதிகாரியின் இந்தக் கூற்று தன்னை எவ்வகையிலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை என்று கூறிய இயேசு சபை அருள்தந்தை Paul Dall'Oglio, கடந்த ஓராண்டளவாக சிரியாவில் சிறுவர்களும், இளையோரும் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாகி இறப்பது அடிக்கடி நிகழ்ந்துள்ளது என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதே கருத்தை இப்புதனன்று வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை, சிரியாவின் தலைவர் Bashar al-Assad மனது வைத்தால், இவ்விளையோரையும், சிறுவர்களையும் ஒரு நொடியில் விடுவிக்க முடியும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.