2012-03-28 16:07:05

கியூபாவில் திருத்தந்தை


மார்ச்28,2012. கரீபியன் கடலில் கியூபாத் தீவையும், வேறுபல தீவுகளையும் கொண்டுள்ள கியூபக் குடியரசு, கியூபா என அழைக்கப்படுகிறது. கியூபாவுக்கு வடக்கே 90 மைல்கள் தூரத்தில் அமெரிக்க ஐக்கிய நாடும், பஹாமாசும், மேற்கே மெக்சிகோவும், தெற்கே Cayman தீவுகளும், ஜமெய்க்காவும், தென்கிழக்கே ஹெயிட்டியும், தொமினிக்கன் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. ஐரோப்பிய நாடுகாண் பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492ம் ஆண்டில் கியூபாவைக் கண்டுபிடித்தது முதல், 1898ம் ஆண்டில் முடிந்த இஸ்பானிய-அமெரிக்கச் சண்டை வரை அந்நாடு இஸ்பெயினின் காலனி நாடாக இருந்தது. பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிகாரத்தில் இருந்து, அதனிடமிருந்து 1902ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. அதன்பின்னர் கியூபாவில் 1952ம் ஆண்டில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியில் அந்நாடு Fulgencio Batista என்பவரின் சர்வாதிகாரத்தின்கீழ் வந்தது. அவரது ஆட்சியில் அரசியல் அடக்குமுறை, ஊழல், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை நாடு எதிர்நோக்கியது. இறுதியில் 1959ம் ஆண்டு, “ஜூலை 26” என்ற புரட்சியின் மூலம் அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டார். பின்னர் Fidel Castro வின் தலைமையில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டிலிருந்து கியூபக் கம்யூனிசக் கட்சியின்கீழ் அரசு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 46 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த Fidel Castro, உடல்நலக் குறைவால் 2011ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி பதவி விலகினார். ஒரே கட்சி ஆட்சியமைப்பைக் கொண்ட கியூபாவின் அரசுத்தலைவராக, Fidel Castro வின் சகோதரர் Raúl Castro தற்போது இருந்து வருகிறார்.
கியூபாவின் முதல் பெரிய நகரம் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகரம் Santiago de Cuba. இந்நகரத்தின் புனித பெரிய பேசில் குருத்துவக் கல்லூரியில் இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 8 மணிக்குத் திருப்பலியைத் நிகழ்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அருளாளர் அன்னைதெரேசா தொடங்கிய பிறரன்பு மறைபோதக சபையின் அடைபட்ட மடத் துறவியரில் 10 பேர் இதில் பங்கு பெற்றனர். இத்திருப்பலியின் இறுதியில் Teresa Kereketa என்ற இந்திய அருள்சகோதரியைத் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார் Santiago de Cuba பேராயர் Dionisio García. கடந்த 20 ஆண்டுகளாக இச்சகோதரி திருத்தந்தைக்காகச் செபித்து வரும் ஆன்மீக ஞானத்தாய். இச்சகோதரி சேர்ந்துள்ள சபையின் வழக்கப்படி ஒவ்வொருவரும் ஒரு குருவுக்காகச் செபிக்க வேண்டும். அவ்வாறு இச்சகோதரிக்குக் கிடைத்தவர் கர்தினால் ஜோசப் ராட்சிங்கர். இச்சகோதரியைப் பார்த்ததில் திருத்தந்தை மிகவும் மனம் நெகிழ்ந்தார் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார். இத்திருப்பலிக்குப் பின்னர், இச்செவ்வாய்தின திருப்பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை. அப்போது இந்திய நேரம் இச்செவ்வாய் இரவு 7 மணி 45 நிமிடங்களாகும்.
Santiago de Cuba வின் குருத்துவக் கல்லூரியிலிருந்து El Cobre பிறரன்பு அன்னைமரியா திருத்தலத்துக்கு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு சென்றார் திருத்தந்தை. இத்திங்கள் திருப்பலியின் இறுதியில் இவ்வன்னையின் திருவுருவத்துக்குத் திருத்தந்தை வழங்கிய தங்க ரோஜா மலர், ஏற்கனவே பொன்னிற மேலாடையால் ஒளிர்ந்து கொண்டிருந்த இவவுருவத்தை மேலும் அழகுடன் காட்டியது. கியூபாவில் கத்தோலிக்கரும் மற்ற சமயத்தவரும் கம்யூனிசவாதிகளும் போற்றும் இவ்வன்னைமரியா அந்நாட்டின் பாதுகாவலியாவார்.








All the contents on this site are copyrighted ©.