2012-03-28 16:06:42

El Cobre பிறரன்பு அன்னைமரியா திருத்தல வரலாறு


மார்ச்28,2012. Santiago del Prado என்ற கிராமத்தில் Rodrigo, Juan de Hoyos ஆகிய இரு சகோதரர்களும், அவர்களது அடிமையான இளைஞர் Juan Morenoவும், Barajagua கறிக்கடையில் கறியைப் பதப்படுத்துவதற்கு உப்பு தேவைப்பட்டதால் உப்பு எடுப்பதற்காக Nipe வளைகுடாவில் படகில் சென்றனர். அப்போது புயல் அடிக்க, அவர்களின் சிறிய படகு பேரலைகளில் அலைகழிக்கப்பட்டது. அடிமை ஹூவான் கழுத்தில் அன்னைமரியா பதக்கத்தை அணிந்திருந்தார். இந்த "மூன்று ஹூவான்களும்" அன்னைமரியாவிடம் உருக்கமாகச் செபிக்கத் தொடங்கினர். உடனே கார்மேகங்கள் கலைந்தன. புயலும் நின்றது. அப்போது தண்ணீரில் ஓர் உருவம் அவர்களை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்தது. முதலில் சிறுமியின் சிலை என்று நினைத்த அவர்கள், அதைத் தூக்கிப் பார்த்த போது வேறு விதமாகக் கண்டனர். அது, குழந்தை இயேசுவை தனது வலது கரத்திலும், இடது கரத்தில் தங்கச் சிலுவையையும் கொண்டிருந்த மரத்தாலான அன்னைமரியா திருவுருவம் என்று கண்டனர். அந்தத் திருவுருவத்தில், “ Yo Soy la Virgen de la Caridad அதாவது நானே பிறரன்பு மாதா” என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், அது தண்ணீரில் மிதந்து வந்த போதிலும் கொஞ்சம்கூட நனையாமல் இருந்தது. இத்திருவுருவம் 1604ம் ஆண்டுக்கும் 1612ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Santiago del Prado என்ற சிறிய கிராமம்தான் தற்போது El Cobre என அழைக்கப்படுகிறது. அவ்விடத்தில்தான் திருத்தலம் எழுப்பப்பட்டுள்ளது. கியூபாவின் புரட்சியின் போது இவ்வன்னைமரி மிகவும் உதவினார் என்பது அந்நாட்டினரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்புதுமை நடந்ததன் 400வது ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதற்காகவே திருத்தந்தை கியூபா சென்றுள்ளார். இந்த ஜூபிலி ஆண்டுக்கென கியூப ஆயர்கள் தயாரித்த செபத்தை, திருத்தந்தையோடு சேர்ந்து அவ்வாலயத்திலிருந்த ஆயர்களும் துறவியரும் செபித்தனர். ஆப்ரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கியூபா மக்களுக்காகவும், அண்டை நாடான ஹெயிட்டியில் வாழ்வோருக்காவும் சிறப்பாகச் செபித்தார் திருத்தந்தை.
கோப்ரே பிறரன்பு அன்னைமரியா பீடத்தின் முன்பாக முழந்தாளிட்டுச் செபித்தத் திருத்தந்தை, மெழுகுதிரியையும் ஏற்றினார். அப்போது சால்வே ரெஜினா என்று மரபு மாதாச் செபத்தைச் சொன்னார். பின்னர் அனைவரும் அச்செபத்தைப் பாடினர். இவ்வன்னை, “மம்பிசா கன்னிமரியா” எனவும் அழைக்கப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.