2012-03-27 16:18:43

திருத்தந்தையின் 23 வது வெளிநாட்டுத் திருப்பயணம் – கியூபாவில் திருத்தந்தை


மார்ச்27,2012. எனதன்புமிக்க மெக்சிகோ நண்பர்களே, கடவுளில் நிலைத்திருங்கள், உங்களது கிறிஸ்தவ மூலத்தைப் பேணிக் காத்துக் கொள்ளுங்கள் என்ற அழைப்போடு மெக்சிகோ நாட்டில் மேற்கொண்ட 48 மணி நேரத் திருப்பயண நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடந்த வெள்ளி மாலை மெக்சிகோ சென்ற திருத்தந்தை, அந்நாடு, இஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் அடைந்ததன் 200வது ஆண்டு நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தினார். இதில் 6,40,000 விசுவாசிகள் கலந்து கொண்டனர். மேலும், இப்பயணத்தில் Leon மற்றும் Guanajuato நகரங்களின் சாவிகளைப் பெற்றார். போதைப் பொருள் வியாபாரிகள் தொடர்புடைய வன்முறை அதிகமாக இருக்கும் மெக்சிகோவில், இவ்வன்முறையில் தங்களது நெருங்கிய உறவுகளை இழந்தவர்களைச் சந்தித்தார். இவ்வாறு மெக்சிகோவில் திருப்பயண நிகழ்ச்சிகளை முடித்து கியூபா நாடு செல்வதற்காக இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு Guanajuato பன்னாட்டு விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. அப்போது இந்திய நேரம் திங்கள் இரவு 8 மணியாகும். விமானநிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மெக்சிகோ மக்கள், ஆரவாரத்துடன் வத்திக்கான் கொடிகளை ஆட்டிக் கொண்டு, "Benedito", "Benedicto hermano, ya eres mexicano!" அதாவது சகோதரர் பெனடிக்ட், நீங்கள் ஏற்கனவே மெக்சிகராக ஆகிவிட்டீர்கள் என்ற அர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பாடிக் கொண்டு இருந்தனர்.
விமானநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அழகான சிறிய மேடையில், திருத்தந்தை, மெக்சிகோ அரசுத்தலைவர் Felipe de Jesús Calderón Hinojosa, அவரது துணைவியார் மார்கிரேட் அமர்ந்திருந்தனர். முதலில் அரசுத்தலைவர் Felipe Calderón திருத்தந்தைக்கு நன்றியுரை ஆற்றினார்.
திருத்தந்தையைப் பார்த்ததில் மெக்சிகோ நாட்டுச் சிறாரும், இளையோரும் அளவில்லாத மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருத்தந்தையே, உமது பிரசன்னத்தில் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ள மெக்சிகோ மக்களின் ஆனந்தக் கண்ணீரையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். பல இலட்சக்கணக்கான, மெக்சிகோ மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். இந்தத் திருப்பயணம், எமக்கு ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
இவ்வாறு அரசுத்தலைவர் Felipe Calderón திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் திருத்தந்தையும் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார்.
இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் பெற்றார் திருத்தந்தை. லெயோன் நகரில் அவர் தங்கியிருந்த Miraflores கல்லூரியில் அவரைச் சந்திக்க வந்தவர்களிடம், இத்தகைய ஆர்வமிக்க வரவேற்பையும் பாசத்தையும் நான் ஒருபோதும் பெற்றதில்லை. எனவே மெக்சிகோ எனது இதயத்தில் எப்போதும் இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும் என்று தெரிவித்திருந்தார். மெக்சிகோ மக்களும், நாங்கள் திருத்தந்தையை அன்பு செய்கிறோம். எனவே அவரது ஆசீர் பெற வந்தோம் என்றுதான் சொல்லியுள்ளார்கள். இத்தகைய அன்புமிக்க மக்களிடமிருந்து பிரியாவிடை பெற்று கியூபாவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

மெக்சிகோவிலிருந்து 2650 கிலோ மீட்டர் தூரத்தில் கரீபியன் கடலில் அமைந்துள்ள கியூபாவுக்கு 4 மணி நேரம் விமானப் பயணம் செய்து அந்நாட்டின் Santiago de Cuba வை திருத்தந்தை அடைந்த போது உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணி. விமான நிலையத்திலிருந்து திருத்தந்தையின் கார் வரும் Santiago de Cuba நகரத் தெருக்களில் காலை 10 மணிக்கெல்லாம் மக்கள் குவியத் தொடங்கி விட்டனர். அத்தெருக்கள் மனித ஆறுகளாகத் தெரிந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர். ஆல் இத்தாலியா போயிங் 777 விமானத்திலிருந்து இறங்கி வந்த திருத்தந்தையை, கியூப அரசுத்தலைவர் Raul Castro கைகுலுக்கி வரவேற்றார். அவ்விடத்தில் சிறாரும் திருத்தந்தையை வரவேற்றனர். 21 துப்பாக்கிகள் முழங்க, சிவப்புக்கம்பள வரவேற்பு நிகழ்வுகள் நடந்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருத்தந்தை அமர, கியூப அரசுத்தலைவர் Raul Castro வரவேற்புரை நிகழ்த்தினார். அமைதி, பணக்கார நாடுகளின் சுரண்டல், புரட்சிகளின் முன்னேற்றம் போன்ற தலைப்புகளில் பேசினார்.
கியூப அரசியல் அமைப்பில் சமய சுதந்திரத்துக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் அரசு சமயங்களுடனும், சமய நிறுவனங்களுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது. திருப்பீடத்துக்கும் கியூபாவுக்கும் இடையே நல்லுறவுகள் நிலவி வருகின்றன. கியூபக் குடிமக்கள், “ஆழமான உறுதிப்பாடு கொண்டவர்கள்”. உலகப் பொருளாதாரத்தில் ஒருமைப்பாட்டுணர்வுக்குப் பதிலாக, அறிவற்ற நகர்வுத்தன்மைகளால், திட்டமிட்ட நெருக்கடி நிலை பரவி வருகின்றது. சிலர் அனைத்து செல்வத்தையும் கொண்டிருக்க, ஏழைகளும் பசித்தோரும், வேலையற்றோரும், சிகிச்சை பெறாத நோயாளிகளும் துன்புறுகின்றனர். கியூபாவுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் தடை, இத்தீவு நாட்டில் பசியையும் சோர்வையும் இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றது என்று சொல்லி, அதற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். பிறரன்பு அன்னைமரியின் 400வது ஆண்டு விழாவில் சமய வேறுபாடின்றி எல்லா மக்களும் பங்கு கொள்கின்றனர் என்று கியூப அரசுத்தலைவர் Raul Castro தனது உரையில் குறிப்பிட்டார்.
கியூபாவுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் தடை 1962ம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கின்றது. இந்நடவடிக்கை கியூப மக்களை மிகவும் பாதிக்கின்றது என்று திருப்பீடம் தொடர்ந்து குறை கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கியூப அரசுத்தலைவரின் உரைக்குப் பின்னர் திருத்தந்தையும் கியூபாவுக்கானத் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
இவ்விமானநிலைய வரவேற்பை முடித்து Santiago de Cuba பேராயர் இல்லம் சென்ற போது உள்ளூர் நேரம் மாலை 3மணி 15 நிமிடங்களாகும். அப்போது இந்திய நேரம் இச்செவ்வாய் அதிகாலை 1 மணி 45 நிமிடங்களாகும். பேராயர் இல்லத்தில் ஓய்வெடுத்த திருத்தந்தை மாலை 5.30 மணிக்கு Antonio Maceo என்ற வளாகத்தில் திருப்பலியைத் தொடங்கினார். Antonio Maceo என்பவர் 1845 முதல் 1896 வரை நடைபெற்ற இரண்டு தேசிய விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்தவர்.
இத்திருப்பலியானது, கோப்ரே பிறரன்பு அன்னைமரியா திருவுருவம், ஏழை மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டதன் 400வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாகும். இவ்வன்னைமரி கியூபாவின் பாதுகாவலியாவார். திருத்தந்தை நிகழ்த்திய இத்திருப்பலியில் கியூப அரசுத்தலைவர் Raul Castro உட்பட சுமார் 2,50,000 பேர் கலந்து கொண்டனர்.

இத்திருப்பலியை அவர் தொடங்குவதற்கு முன்னர், அன்னைமரியாவின் திருவுருவம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு அவ்வளாகத்தில் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. இத்திருப்பலியை நிறைவு செய்து Santiago de Cuba புனித பெரிய பேசில் குருத்துவக் கல்லூரி சென்றார் திருத்தந்தை. அங்கு இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். இத்துடன் இத்திங்கள் தின நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன.
கம்யூனிச நாடான கியூபாவில் முந்தைய ஆண்டுகளைவிட தற்போது மத நடவடிக்கைகள் மீது மிகுந்த சகிப்புத்தன்மை காணப்படுகின்றது. ஆயினும் புதிய ஆலயங்கள் கட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு ஊடகங்களைக் கத்தோலிக்கர் பயன்படுத்துவதும் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் சுமார் பத்து விழுக்காட்டினரே கத்தோலிக்கத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். இம்மக்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தி கியூபத் திருப்பயணத்தை நிறைவு செய்து இவ்வியாழன் காலை உரோம் வந்து சேருவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.