2012-03-26 16:51:32

மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க ஆயர்கள், அப்பகுதி முழுவதும் நம்பிக்கையின் விதையை விதைக்குமாறு திருத்தந்தை வலியுறுத்தல்


மார்ச்26,2012.தற்போது மறைமாவட்டங்கள் எண்ணற்ற சவால்களையும் இன்னல்களையும் எதிர்நோக்கியுள்ளன. எனினும், நம் ஆண்டவர் உயிர்த்து விட்டார் என்ற உறுதியான அறிவில், மனித வரலாற்றில் தீமைக்குக் கடைசி வார்த்தை இல்லை என்ற உறுதியிலும், நம்மை ஏமாற்றாத நம்பிக்கைக்குப் புதிய எல்லைகளைக் கடவுளால் திறந்து வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும் முன்னோக்கிச் செல்லுங்கள். நற்செய்திப்பணியின் உங்கள் வெற்றிகளிலும் உங்கள் சோதனைகளிலும் நீங்கள் தனியாக இல்லை. துன்பங்களிலும் ஆறுதல்களிலும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். புனித பேதுருவின் வழிவருபவரின் செபம் உங்களுக்கு என்றும் உண்டு. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நன்கறியச் செய்யும் உங்கள் மறைப்பணியில் அவர் உங்களை உற்சாகப்படுத்துகிறார். இப்பணியில் தடைகளை எதிர்கொள்ளும் போது சோர்வுற வேண்டாம். இப்பகுதியில் நற்செய்திக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களின் பணி குறிப்பிடும்படியானது. இவ்வாண்டில் தொடங்கிவருக்கும் விசுவாச ஆண்டு, மனிதரைக் கிறிஸ்துவிடம் இட்டுச் செல்லும் நோக்கத்தைக் கொண்டது. அவரது அருளானது பாவம் மற்றும் அடிமைத்தனத்தின் கட்டுக்களிலிருந்து அனைவரையும் விடுதலை செய்யும். உங்களது குருத்துவ மாணவரிடம் மிகுந்த கரிசனையோடு நடந்து கொள்ளுங்கள். குருக்களுக்கு மிக நெருக்கமாக இருங்கள். இவர்கள் தங்கள் ஆயரின் புரிந்து கொள்ளுதலையும், ஊக்கத்தையும் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. துறவற வாழ்வின் பல்வேறு நிலைகளை மதித்து அவர்களுக்கு உறுதுணையாயிருங்கள். இறைவனின் அருளால் இலத்தீன் அமெரிக்க மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த முடியும். ஒளியின் அன்னைமரி உலகின் இருளை அகற்றி நம் பாதையை ஒளிர்விப்பாராக என்று ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.