2012-03-26 16:52:28

திருத்தந்தையின் 23 வது வெளிநாட்டுத் திருப்பயணம் – மெக்சிகோவில் திருத்தந்தை


மார்ச்26,2012. உலகில் கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டுள்ள இரண்டாவது நாடு மெக்சிகோ. வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவில் சுமார் 92 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இக்காலத்து நவீன கலாச்சாரத் தாக்கங்கள் மெக்சிகோ மக்களையும் தாக்காமல் இல்லை. எனவே இம்மக்களின் விசுவாச வாழ்க்கையை ஆழப்படுத்துவதற்காக இத்திருப்பயணத்தை மேற்கொள்வதாக இத்திருப்பயணத்தைத் தொடங்கு முன்னரே திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். திருத்தந்தையின் இந்நோக்கம் நிறைவேறியிருப்பதாக இப்பயண நாட்களில் திருத்தந்தையோடு எல்லா இடங்களுக்கும் செல்லும் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி நிருபர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். திருத்தந்தையின் செயல்களையும், உற்சாகமூட்டும் உரைகளையும் பார்க்கும் போது, திருத்தந்தை அம்மக்கள் மீது கொண்டிருக்கும் பாசத்தை உணர முடிகின்றது. மெக்சிகோ மக்களும் திருத்தந்தையைத் தங்களது கவுரவக் குடிமகனாக ஏற்றிருப்பதை, அவர்கள் அவரை வாழ்த்திப் பாடும் பிரபலப் பாடல்கள் மூலம் அறிய முடிந்தது. இஞ்ஞாயிறு காலை திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் கலந்து கொண்ட ஆறு இலட்சத்துக்கு அதிகமான விசுவாசிகள் நடந்து கொண்ட விதம், இதனை மேலும் உறுதிப்படுத்தியது என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மெக்சிகோவுக்கான இத்திருப்பயணத்தின் மூன்றாவது நாளான இஞ்ஞாயிறு காலை உள்ளூர் நேரம் 9.15 மணிக்கு, லெயோன் நகரின் Miraflores கப்புச்சின் அருள்சகோதரிகள் இல்லத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 200வது ஆண்டு பூங்காவுக்குச் சென்றார் திருத்தந்தை. மெக்சிகோவின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொட்டிலாக கருதப்படும் Guanajuato மாநிலத்திலுள்ள இந்தப் பூங்கா, அந்நாடு இஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் 200வது ஆண்டின் நினைவாக அமைக்கப்பட்டது. 14 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட இப்பூங்காவில், சுமார் 3,50,000 பேர் அமர முடியும். திருத்தந்தையை இப்பூங்காவிற்கு ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், Cubilete மலைமேல் பறந்து சென்றது. 2,700 மீட்டர் உயரமான இம்மலையின் உச்சியில் கிறிஸ்து அரசர் திருவுரும் உள்ளது. 80 டன் எடையையும், 22 மீட்டர் உயரத்தையும் கொண்டு, இருகரங்களையும் விரித்தபடியே இருக்கும் கிறிஸ்துவின் இவ்வுருவத்தின் பாதத்துக்கு அருகில் இரண்டு பக்கமும் இரு வானதூதர் நிற்கின்றனர். ஒருவரின் கையில் மகுடமும் மற்றவரின் கையில் முள்கீரிடமும் இருக்கின்றன. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள கிறிஸ்துவின் திருவுருவத்துக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்துவின் திருவுருவம் இது. 1920களில் மத சுதந்திரத்துக்காகப் போராடி உயிரிழந்த மறைசாட்சிகளைக் கவுரவப்படுத்துவதற்காக இது அமைக்கப்பட்டது. இத்திருவுருவம் வைக்கப்பட்டுள்ள இம்மலையானது மெக்சிகோவின் மையத்தில் உள்ளது. 1923ம் ஆண்டில் மெக்சிகோ திருஅவை அமைத்த இத்திருவுருவம், 1926ம் ஆண்டில் அப்போதைய அரசுத்தலைவர் Plutarco Elias Calles என்பவரால் குண்டு போட்டு தகர்க்கப்பட்டது. 1926 முதல் 1929 வரை அந்நாட்டில் இடம் பெற்ற குருக்களுக்கு எதிரான Cristeros என்ற சண்டையே இதற்குக் காரணம். எனினும் மெக்சிகோ அரசு, திருஅவையுடன் நல்லுறவுடன் இருப்பதன் அடையாளமாக, 1940களில், அரசும் தலத்திருஅவையும் சேர்ந்து மீண்டும் கிறிஸ்து அரசர் திருவுருத்தை Cubilete மலைமேல் அமைத்தன.
இந்த “200வது ஆண்டு நிறைவு பூங்கா”வில் இஞ்ஞாயிறு காலை திருத்தந்தை நிகழ்த்திய விழாத் திருப்பலியில் கலந்து கொள்வதற்காக, ஆயிரக்கணக்கான விசுவாசிகள் முந்திய நாள் இரவே அவ்விடத்திற்கு வந்து விட்டனர். மெக்சிகோவில் வருகிற ஜூலையில் இடம்பெறும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள், உலகின் பெரிய செல்வந்தரான Carlos Slim உட்பட ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் அப்பூங்காவில் அமர்ந்திருக்க, திருத்தந்தை திறந்த காரில் அவர்கள் மத்தியில் வந்தார். திருத்தந்தைக்குப் பரிசாக அளிக்கப்பட்ட மெக்சிகோவின் மரபுத் தொப்பியை அவர் அணிந்து கொண்டு சென்ற போது கிளம்பிய ஆரவாரங்கள் விண்ணைப் பிளந்தன. "se siente, se siente, el Papa está presente!" அதாவது “அவர் வருகிறார், அவர் வருகிறார், திருத்தந்தை இப்பொழுது இங்கிருக்கிறார்” என்று இளையோர் பாடிக் கொண்டே இருந்தனர். “பெனடிக்ட், நண்பர், ஜான் பால் உங்களோடு இருக்கிறார்” எனப் பொருள்படும் மற்றொரு பாடலையும் பாடிக் கொண்டிருந்தனர்.
இந்த மக்களின் அன்பு மழையில் நனைந்து திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். லெயோன் பேராயர் Jose Guadalupe Martin Rabago திருத்தந்தையை முதலில் வரவேற்றுப் பேசினார். இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளின் சுமார் 250 கர்தினால்கள், சுமார் மூவாயிரம் அருட்பணியாளர்கள் ஆகியோருடன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுத் திருப்பலியின் இறுதியில், மூவேளை செப உரையும் நிகழ்த்தி விசுவாசிகளை ஆசீர்வதித்தார். பின்னர் மெக்சிகோவின் பாதுகாவலியாகிய குவாதாலூப்பே அன்னைமரியாவின் 91 படங்களை ஆசீர்வதித்தார். இவை அந்நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களுக்கும் அனுப்பப்படும்.
200வது ஆண்டு நிறைவு நினைவுப் பூங்காவில் இத்திருப்பலியை நிறைவு செயத பின்னர், லெயோன் Miraflores கப்புச்சின் அருள்சகோதரிகள் இல்லத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். மதிய உணவருந்தி ஓய்வெடுத்தார். மாலையில் லெயோன் ஒளியின் அன்னைமரியா பசிலிக்காவில் மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க ஆயர்களுடன் மாலை திருப்புகழ்மாலை செபித்தார். உரை ஒன்றும் நிகழ்த்தினார்.
இத்துடன் இஞ்ஞாயிறுதின நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன. மெக்சிகோவில் திருத்தந்தையைப் பார்த்ததில் பல்வேறு வயதினரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். அவரைப் பார்த்து ஆசீர் பெற்றதில் களைப்பும் தூக்கமும் பறந்து விட்டன என்று இரவெல்லாம் காத்திருந்த மக்கள் கூறியுள்ளனர்.
இத்திங்களன்று மெக்சிகோவில் பயணத் திட்டங்களை நிறைவு செய்து கியூபாவில் திருப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்







All the contents on this site are copyrighted ©.