2012-03-26 15:50:48

ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட 54 அணுசக்தி நிலையங்களில், ஒரே ஒரு நிலையம் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது


மார்ச்,26,2012. ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட 54 அணுசக்தி நிலையங்களில், ஒரே ஒரு நிலையம் மட்டுமே தற்போது இயங்கி வருகிறதென்றும், இந்நிலையமும் வருகிற மே மாதம் மூடப்படவுள்ளது என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நாட்டின் Fukushimaவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவைகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏற்பட்ட அணுக்கசிவின் ஆபத்தை உணர்ந்துள்ளதால், அந்நாட்டின் அணு சக்தி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணுமின் நிலையத்திலும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பின், அணு உலைகளை மீண்டும் இயக்கக் கூடாதென்று அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் குரல் எழுப்பி வருவதால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது.
ஜப்பானில் மின்சக்தியை வழங்கும் Tokyo Electric Power Co என்ற நிறுவனம் Kashiwazaki-Kariwa என்ற அணு சக்தி நிலையத்தை அண்மையில் மூடியது. இதைத் தொடர்ந்து, Hokkaido என்ற தீவில் அமைந்துள்ள ஒரே ஓர் அணு உலை மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையமும் வருகிற மே மாதம் மூடப்படவுள்ளது.
ஜப்பானுக்குத் தேவையான மின்சக்தியில் மூன்றில் ஒரு பங்கு அணு உலைகளிலிருந்து பெறப்பட்டது. தற்போது, அணு உலைகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளதால், அந்நாட்டிற்குத் தேவையான மின் சக்தியை வேறுவழிகளில் பெறும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
Fukushima அணுக்கசிவு விபத்திற்குப் பின், அந்நாட்டின் தொழிற்சாலைகள் இரவில் இயக்கப்படுவது மற்றும் வார இறுதிநாட்களில் இயக்கப்படுவது போன்ற முடிவுகளால் தொழிற்சாலைகள் வழக்கமாக பயன்படுத்தி வந்த மின்சக்தியில் 15 விழுக்காடு மட்டுமே தற்போது பயன்படுத்தி வருகின்றன.
அனைத்து அணு மின் நிலையங்களும் மூடப்படும் தருணத்தில், அந்நாட்டின் உற்பத்திப் பொருட்களைப் பிற நாடுகளில் செய்ய வேண்டியிருக்கும் என்று தொழில் நிறுவனங்கள் கூறி வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.