2012-03-26 15:49:37

கியூபாவில் மத விடுதலை மற்றும் மனித உரிமைகள் இடம்பெற அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்


மார்ச்,26,2012. கம்யூனிச நாடான கியூபாவில் மத விடுதலை மற்றும் மனித உரிமைகள் இடம்பெற அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அனைவரும் இணைந்து வலியுறுத்துவதாக அறிவித்தார் அமெரிக்க ஆயர் Richard Pates.
இவ்வாரம் திங்கள் பிற்பகல் முதல் புதன் மாலை வரை இடம்பெறும் திருத்தந்தையின் கியூபா நாட்டுத் திருப்பயணத்தை முன்னிட்டு, அமெரிக்க ஆயர்களின் அனைத்துலக நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ஆயர் Pates வெளியிட்டுள்ளச் செய்தியில், கியூபாவில் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மத விடுதலையை பலப்படுத்தவும், சமூக மேம்பாட்டிற்கும், திருஅவை எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்க ஆயர்கள் தங்கள் உதவிகளை வழங்குவதாகக் கூறினார்.
மக்களைத் தனிமைப்படுத்தி வைக்காமல், பேச்சுவார்த்தைகளையும் தொடர்புகளையும் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே மத விடுதலை மற்றும் மனித உரிமைக்களுக்கான மதிப்பை ஊக்குவிக்க முடியும் என்ற கியூப ஆயர்களின் கண்ணோட்டத்தை தாங்களும் ஆதரிப்பதாக அறிவித்தார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் Des Moines மறைமாவட்ட ஆயர் Pates.
திருத்தந்தையின் திருப்பயணம் இடம்பெறும் இவ்வேளையில், மனித வாழ்வின் மதிப்பிற்காகவும் மாண்பிற்காகவும் திருத்தந்தையோடு இணைந்து அமெரிக்க ஆயர்களும் குரல் கொடுப்பதாக மேலும் அறிவித்தார் ஆயர் Pates.








All the contents on this site are copyrighted ©.