2012-03-24 15:40:51

திருத்தந்தையின் 23 வது வெளிநாட்டுத் திருப்பயணம் – மெக்சிகோவில் திருத்தந்தை


மார்ச்24,2012. பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் திருப்பயணியாக வந்துள்ளேன் என்ற நல்வார்த்தைகளுடன் மெக்சிகோ நாட்டுக்கானத் தனது முதல் திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஆல் இத்தாலியா போயிங் 777ல் விமானப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, அப்பயணத்தின் போது பன்னாட்டு ஊடகங்களின் 72 பிரதிநிதிகளைச் சந்தித்து, நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.
வத்திக்கான் மற்றும் மெக்சிகோ நாடுகளின் கொடிகளை முகப்பில் பறக்கவிட்டுக் கொண்டு ஆல் இத்தாலியா விமானம் மெக்சிகோ நாட்டு Guanajuato பன்னாட்டு விமானநிலையத்தின் தரையைத் தொட்ட போது, இவ்விரு நாடுகளின் கொடிகளை ஆட்டிக் கொண்டு மக்கள் செய்த ஆரவாரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 14 மணிநேரம் விமானப் பயணம் செய்த, 85 வயதை வருகிற மாதத்தில் எட்டப்போகும் திருத்தந்தை களைப்பாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை விஞ்சுவதாக அவரது செயல்கள் இருந்தன. "Se ve, se siente, el Papa está presente!" அதாவது நம்மால் பார்க்க முடிகின்றது, நம்மால் உணர முடிகின்றது, திருத்தந்தை இங்கே இருக்கிறார் என்ற மக்களின் ஆரவார வரவேற்பில் மனமகிழ்ந்து, விமானப்படிகளில் இறங்கி வந்த போது கைககளை விரித்து வாழ்த்தினார்.
விமானப்படிகளில் காத்திருந்த மெக்சிகோ அரசுத்தலைவர் Felipe Calderón, அவரது மனைவி, திருப்பீடத் தூதர் ஆகியோரை வாழ்த்தினார். மூன்று சிறார் ஒரு சிறுபெட்டியில் கொடுத்ததை மகிழ்வோடு பார்த்து அச்சிறாரின் முகங்களைத் தடவிக் கொடுத்து வாழ்த்தினார். விமான நிலையத்தில் இடம் பெற்ற சிவப்புக்கம்பள வரவேற்பில் முதலில் அரசுத்தலைவர் Felipe Calderón பேசினார்.
பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். இவ்விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி இளையோர் உட்பட பல இளையோரைத் தழுவினார், வாழ்த்தினார். சில சிறார் திருத்தந்தையைத் தொடுவதற்கு அரசுத்தலைவரின் மனைவி உதவி செய்தார். அவசரப்படாமல் நீண்ட நேரம் எடுத்து இவர்களை ஆசீர்வதித்தார். பின்னர் அங்கிருந்து 34 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்றார். மெக்சிகோ, சுமார் 92 விழுக்காட்டுக் கத்தோலிக்கரைக் கொண்ட நாடு என்பது திருத்தந்தைக்கு மக்கள் கொடுத்த வரவேற்பில் தெளிவாகத் தெரிந்தது. லெயோன் நகரில் கப்புச்சின் அருட்சகோதரிகள் நடத்தும் Miraflores கல்லூரி சென்று இரவு உணவு அருந்தினார். இத்துடன் இந்த முதல் நாள் பயணத்திட்டம் நிறைவுக்கு வந்தது. திருத்தந்தை Miraflores கல்லூரியை அடைந்த போது இந்திய நேரம் இச்சனிக்கிழமை காலை 6 மணியாகும்.
வருகிற திங்களன்று மெக்சிகோவிலிருந்து கியூபா நாடு செல்லும் திருத்தந்தை, வருகிற வியாழனன்று உரோம் திரும்புவார்.







All the contents on this site are copyrighted ©.