2012-03-22 15:22:12

சிரியாவிலிருந்து கிறிஸ்தவர்களை முற்றிலும் அகற்றும் முயற்சிகள் நடைபெற்றாலும், இயேசு சபையினர் பணிகளைத் தொடர முடிவு


மார்ச்,22,2012. சிரியாவில் சித்திரவதைகளும், வன்கொடுமைகளும் நிகழ்வதற்கு, எதிர்கட்சியினரே பெருமளவில் காரணம் என்றும், கிறிஸ்தவர்களை அந்நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றும் முயற்சிகள் நடைபெறுகிறதென்றும் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவில் பணிபுரியும் 'மனித உரிமைகள் கண்காணிப்பு' (Human Rights Watch) என்ற அரசுசாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் அல் கெய்தா வுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட 'பரூக் படையினர்' ("Brigade Faruq") என்ற குழுவினர் Homs நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழும் கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களை விரட்டி அடிக்கின்றனர் என்றும், அத்துமீறி அவர்கள் இல்லங்களை ஆக்கிரமிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை எவ்வளவு தூரம் உண்மை என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், பிற நாடுகளின் ஊடகங்கள் சிரியாவில் நடைபெறும் வன்முறைகள் பற்றி மௌனம் காப்பதால், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் செய்துவரும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று Aleppo அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Giuseppe Nazzaro, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சென்ற ஞாயிறன்று Aleppo நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்துப் பேசிய ஆயர் Nazzaro, ஞாயிறன்று புனித பொனவெந்தூர் ஆலயத்தில் மறைகல்வி படித்து வந்த குழந்தைகளை அங்கிருந்த துறவியர் 15 நிமிடங்களுக்கு முன்னரே அனுப்பிவிட்டதால், அக்குழந்தைகள் அற்புத விதமாகக் காப்பாற்றப்பட்டனர் என்றும் எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, Homs நகரில் பணிபுரியும் இயேசு சபை துறவிகள், தாங்கள் தொடர்ந்து அந்நகரில் தங்கி, தங்களால் இயன்றவரை அம்மக்களுக்கு உதவிகளையும் ஆறுதலையும் வழங்க விருப்பதாக அறிவித்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.