2012-03-20 15:09:07

பிரான்சின் யூதமதப் பள்ளியில் இடம் பெற்ற வன்முறைக்கு கத்தோலிக்கத் தலைவர்கள் கண்டனம்


மார்ச்20,2012. பிரான்சின் Toulouse நகரின் யூதமதப் பள்ளி வளாகத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூடு வன்முறை தாக்குதல் குறித்து தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் கத்தோலிக்கத் தலைவர்கள்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியத் திருஅவைத் தலைவர்களும், திருப்பீடப் பேச்சாளரும் தங்களது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மனிதர் ஒருவர், Toulouse நகரின் Ozar Hatorah பள்ளி வளாகத்தில் இத்திங்கள் காலை 8 மணிக்குத் துப்பாக்கியால் சுட்டதில் யூதமத குரு, அவரது இரண்டு மகன்கள், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகள், பள்ளி ஆசிரியர் ஆகியோர் இறந்தனர் மற்றும் 17 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பள்ளியில் 11க்கும் 18 வயதுக்கும் உட்பட்ட 200 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகக் கொடுமையானது மற்றும் வெட்கத்துக்குரிய செயல் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இத்தாலியின் தூரின் பேராயர் வெளியிட்டுள்ள செய்தியில், தூரின் நகர மக்கள், யூத மதத்தினருடன் எப்பொழுதும் நல்லுறவுடன் வாழ்வதாகவும், இவ்வன்முறை தங்களுக்கு மிகுந்த வேதனையைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரெஞ்ச் ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான இவ்வன்முறையை அனைத்துக் கத்தோலிக்கரும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.