2012-03-20 15:10:06

ஒடிசாவில் கடத்தப்பட்டுள்ள இத்தாலியர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு ஒடிசா கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்


மார்ச்20,2012. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் கடத்தி வைத்துள்ள இரண்டு இத்தாலியர்கள் எவ்விதக் காயங்களுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று ஒடிசா மாநிலக் கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த புதனன்று கடத்தப்பட்டுள்ள இரண்டு இத்தாலியர்களும் விடுதலை செய்யப்படுவதற்கு அரசும் நன்மனம் கொண்ட அனைவரும் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் Cuttack-Bhubaneshwar பேராயரும் ஒடிசா ஆயர் பேரவைத் தலைவருமான பேராயர் John Barwa.
அதேசமயம், இவ்விரண்டு இத்தாலியரின் குடும்பங்களுக்குத் தங்களது செபங்களையும் தெரிவித்துள்ளார் பேராயர் John Barwa.
இதற்கிடையே, இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக 14 கோரிக்கைகளை முன்வைத்து ஒலிச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் மாவோயிஸ்ட்கள்.
புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பழங்குடிஇன மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சுற்றுலாக்களைத் தடை செய்தல் உட்பட்ட கோரிக்கைகள் அச்செய்தியில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டுள்ள இவ்விரண்டு இத்தாலியரும், ஆதிவாசிப் பெண்களை மிருகங்கள் போல் கருதி புகைப்படம் எடுத்தார்கள் என்று மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
ஆயினும், கடத்தப்பட்டுள்ள 54 வயதாகும் Paolo Bosusco என்ற இத்தாலியர், பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளுக்கென, இந்திய-இத்தாலிய சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வருகிறார். பணத்திற்காக ஒருபோதும் பழங்குடி இன மக்களை நடனமாடுமாறு கேட்டதில்லை எனவும் Bosusco சொல்லியிருக்கிறார்.







All the contents on this site are copyrighted ©.