2012-03-19 15:22:54

தவக்காலத்தின் பாலைவனத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் குரலைக் கேட்குமாறு திருத்தந்தை அழைப்பு


மார்ச்19,2012. தவக்காலத்தின் பாலைவன நாள்கள் முழுவதும் கிறிஸ்தவர்கள், இயேசுவோடு நடந்து, இறைவனின் குரலை உற்றுக்கேட்டு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் பேசும் சோதனைகளை விலக்கி நடக்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தவக்காலத்தில் பாலைவனம் வழியாக இயேசுவோடு எப்படிப் பயணம் செய்வது என்பது குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை, பாலைவனத்தின் விளிம்பில் திருச்சிலுவை சுடர்விடுகின்றது என்று கூறினார்.
இதுவே தமது பணியின் உச்சகட்டம் என்பதையும் இயேசு அறிந்திருந்தார் என்றும், உண்மையில் கிறிஸ்துவின் சிலுவையே அன்பின் உன்னதநிலை, இவ்வன்பே நமக்கு மீட்பை வழங்கியது என்றும் திருத்தந்தை கூறினார்.
மார்ச் 19ம் தேதியான இத்திங்களன்று புனித வளன் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது, தனது நாம விழா நாளான இந்நாளில் தன்னை நினைத்துச் செபிப்பவர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இயற்பெயர் ஜோசப் ராட்சிங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படும் உலகத் தண்ணீர் தினம் குறித்தும் பேசிய திருத்தந்தை, அனைவருக்கும் சமமான, பாதுகாப்பான மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படுவதன் மூலம், ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான உரிமையும், உணவும் கிடைப்பது ஊக்குவிக்கப்படும். இக்காலத்திலும் வருங்காலத்திலும் வாழ்வோரின் நலனுக்காக இப்பூமியின் நன்மைகள் பொறுப்புடன் பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.