2012-03-19 15:24:10

ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்புடன் பேணவேண்டும் - இங்கிலாந்தில் சமய அமைப்புக்களின் முயற்சி


மார்ச்,19,2012. ஞாயிறன்று பகுதிநேர உழைப்பைக் கடைப்பிடித்து வரும் பிரித்தானிய அரசின் சட்டத்தில் மாற்றங்களைக் கொணர விழையும் அரசு உயர் அதிகாரி George Osborneன் முயற்சிக்கு இங்கிலாந்தில் உள்ள சமய அமைப்புக்களும், பிற அமைப்புக்களும் கவலை தெரிவித்துள்ளன.
இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பகுதிநேர கட்டுப்பாட்டை நீக்கி, முழு நேரமும் கடைகள் திறக்கப்படுவது நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்கும் என்று அரசு உயர் அதிகாரி Osborne கூறினார்.
Osborne கூறிய இந்தப் பரிந்துரை இப்புதனன்று பிரித்தானிய பாராளும் மன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், இந்த பரிந்துரைக்கு பல சமய அமைப்புக்களும், குடும்ப நலனில் அக்கறை கொண்ட பல சமுதாய அமைப்புக்களும் தங்கள் கவலையையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக் கிழமையைச் சிறப்புடன் பேணவேண்டும் (Keep Sunday Special Campaign) என்ற மையக்கருத்துடன் துவக்கப்பட்டுள்ள ஒரு விளம்பர முயற்சிக்கு பல கிறிஸ்தவ சபைகளும் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவிலேயே, குடும்பங்களை மையப்படுத்திய ஒரு நாடாக இங்கிலாந்து விளங்கும் என்ற வாக்குறுதியுடன் பதவியேற்ற தற்போதைய பிரித்தானிய அரசு, இப்போது இந்தப் பரிந்துரையைச் செயல்படுத்த முயல்வது குடும்ப நலனுக்குப் பாதகமாக அமையும் என்று இந்த விளம்பர முயற்சியில் வலியுறுத்தப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.