2012-03-19 15:23:30

கவிதைக் கனவுகள்......பேச்சு


“சும்மா இருப்பதே சுகம்” என்றார்கள்
பேசாமல் இருப்பது பெருந்திறமை
மௌன விரதம் காப்பவர்
கற்றுத் தரும் பாடம்.

பேச்சு பலருக்குக் கைவந்த கலை
சிலருக்குப் பேசத் தெரியாது
பலருக்கு பேச மட்டுமே தெரியும்.
சிலர் பேச்சில், காருண்யம் கலந்திருக்கும்
பலர் பேச்சில், வன்மம் வளைய வரும்.
சளசளப் பேச்சு சலிப்புத் தட்டும்
சுருக்கப் பேச்சு சிந்திக்க வைக்கும்.
பயனில்லாப் பேச்சு பதற வைக்கும்
பண்புள்ள பேச்சு பாராட்டைப் பெறும்.
அதிகப் பேச்சு ஆஸ்திக்குப் பகை
ஆத்திரப் பேச்சு ஆயுள் குறைப்பு

சொல்லைக் குறைத்து செயலைப் பெருக்குவது
சொல்லையும் செயலையும் ஒன்றாக வைப்பது
பண்பட்ட மனிதரின் தனிப்பட்ட பண்பு.

நீ பேசத் தொடங்கினால்
உலகம் உன்னை உற்றுக் கேட்க வேண்டும்
நீ பேசத் தொடங்கினால்
ஊரெல்லாம் கூடி வர வேண்டும்
நீ பேசுவதை நிறுத்தினால்...
இவர் இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று
உன் சமூகம் ஏங்க வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.