2012-03-19 15:23:19

எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் முதுபெரும் தலைவர் 3ம் Shenouda வின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்


மார்ச்19,2012. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தந்தையும், அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவருமான 3ம் Shenouda இறைபதம் அடைந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சனிக்கிழமையன்று தனது 88வது வயதில் இறந்த முதுபெரும் தலைவர் 3ம் Shenouda, எகிப்தில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பதட்ட நிலைகள் அதிகரித்து வரும் நிலைகளுக்கு மத்தியில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டுக் கிறிஸ்தவர்களைப் பாதுகாத்து வழிநடத்தி வந்தவர்.
முதுபெரும் தலைவர் 3ம் Shenouda ஐ கடவுளின் விசுவாசமுள்ள பணியாளர் என்று குறிப்பிட்டு, அவரின் சேவையைப் பாராட்டுவதாக அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, எகிப்தின் சுமார் ஒரு கோடிக் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதுபெரும் தலைவர் 3ம் Shenouda, 1973ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுலை வத்திக்கானில் சந்தித்துள்ளார். திருத்தந்தை 2ம் ஜான் பால், கெய்ரோவுக்கு 2000மாம் ஆண்டில் சென்ற போது முதுபெரும் தலைவர் 3ம் Shenouda ஐச் சந்தித்துள்ளார்.
மேலும், எகிப்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியும், முதுபெரும் தலைவர் 3ம் Shenouda எகிப்தில் ஆற்றி வந்த அருஞ்சேவையைப் பாராட்டியுள்ளது.
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை வெளிப்படையாய்க் கண்டித்துப் பேசியவர் முதுபெரும் தலைவர் 3ம் Shenouda








All the contents on this site are copyrighted ©.