2012-03-19 15:25:00

இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் உருவாகும் தொழிநுட்பக் கருவிகளின் கழிவு மிக அதிகமாக இருக்கும்


மார்ச்,19,2012. இன்னும் ஐந்து ஆண்டுகளில், ஆப்ரிக்காவில் பயன்படுத்தாமல் குப்பையில் போடப்படும் செல்லிடப் பேசிகள் போன்ற தொழிநுட்பக் கருவிகளின் கழிவு ஐரோப்பிய நாடுகளில் உருவாகும் தொழில் நுட்பக் கழிவுகளை விட அதிகமாக இருக்கும் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டம் என்ற அமைப்பு (UNEP) அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, அண்மைக் காலங்களில் ஆப்ரிக்க நாடுகளில் பெருகி வரும் தொழிநுட்பக் கருவிகளின் அதிகரிப்புக்கு ஏற்ப, அங்கு உருவாகும் தொழில் நுட்பக் கழிவுகளும் கூடிக்கொண்டே செல்கிறது என்று சொல்லப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் செல்லிடப் பேசியின் பயன்பாடு 100 மடங்கும், கணனியின் பயன்பாடு 10 மடங்கும் அதிகரித்துள்ளது என்று சுட்டிக் காட்டும் இவ்வறிக்கை, Benin, Ivory Coast, Ghana, Liberia, Nigeria ஆகிய 5 நாடுகளில் கடந்த ஆண்டு மட்டும் 10 இலட்சம் டன் தொழில்நுட்பக் கழிவுகள் உருவாக்கப்பட்டன என்று கூறுகிறது.
தற்போது இந்தக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுவதால், நச்சு கலந்த காற்று மக்களின் நல வாழ்வுக்குப் பெரும் பாதகங்களை விளைவிக்கின்றன என்று இவ்வறிக்கை தன் கவலையை வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.