2012-03-17 15:28:28

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஒவ்வொரு நாளும் செய்திகளை வாசிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். இவற்றில் ஒரு சில நம் மனதில் பதிகின்றன, நம்மைப் பாதிக்கின்றன. நான்கு நாட்களுக்குமுன் நான் வாசித்த செய்தி ஒன்று என் நினைவில் இப்போதும் அலைமோதுகிறது. ஒரு சில கேள்விகளையும், ஒரு சில தெளிவுகளையும் எனக்குள் உருவாக்கிய செய்தி இது. NY Times என்ற இணையதளத்தில் நான் வாசித்த செய்தி இது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைக்கூடத்தில் நடைபெற்றுவரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய செய்தி அது. (The Vanishing Mind - Life, With Dementia, Feb.25,2012) இச்செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த புகைப்படம் என் கவனத்தை முதலில் ஈர்த்தது. அந்தப் புகைப்படத்தில் சிறைகளுக்கே உரிய மிக உயர்ந்த சுவர்கள், அச்சுவர்களின் மேல்மட்டத்தில் முள்கம்பி வலைகள் பின்னணியில் தெரிந்தன. அந்த முள்கம்பி வலைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தப் 'பாதுகாப்புச்' சுவர் பின்னணியில் இருக்க, முன்னணியில் நான் பார்த்தது இதுதான்... ஒரு கறுப்பின மனிதர் மற்றொரு வயதான வெள்ளை இன மனிதரின் தோள்மீது கைபோட்டு, ஆதரவாய் அவரை அழைத்துச் செல்வது போன்ற படம். கறுப்பினத்தவருக்கு 50 வயதிருக்கலாம். வெள்ளை இனத்தவருக்கு 70 அல்லது, 80 வயதிருக்கலாம். அந்தக் கறுப்பின மனிதரின் கண்களில் வெளிப்பட்ட கனிவு, அந்தப் படத்தில் அழகாகப் பதிவாகியிருந்தது.

கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடுங்காவல் சிறைக் கூடத்தில் எடுக்கப்பட்ட படம் இது. அங்கு உள்ளவர்கள் அனைவரும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களில் ஒருவர் Sacel Montgomery. இவர் ஒரு பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாகச் கொலை செய்தவர். 25 ஆண்டுகளாக இந்தச் சிறையில் இருக்கிறார். சிறையிலும் பலமுறை காவல் துறையினரோடும், மற்ற கைதிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டவர். சிறையில் ஒருமுறை இவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அண்மையில், சிறை அதிகாரிகள் இவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தனர். இவருக்கு மட்டுமல்ல... சிறையில், நல்ல உடல் நிலையில் உள்ள பலருக்கும் இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சிறையில் பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கும் ஒரு சில கைதிகள் Alzheimer's எனப்படும் நினைவுமறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்பு Sacelக்கும், மற்ற கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை, நோயுற்ற இந்த கைதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். உணவூட்டுதல், குளிப்பாட்டுதல், சக்கர நாற்காலியில் வைத்து அவர்களைத் தள்ளிச் செல்லுதல் என, பல உதவிகளை இவர்கள் செய்கின்றனர். இந்தப் பணிகளால் சிறைக் கைதிகள் மத்தியில் உருவாகியுள்ள தோழமை, அந்தச் சிறைக்கூடத்தில் தற்போது வளர்ந்து வரும் மகிழ்வு, அமைதி இவைகளைப் பற்றி அந்தச் செய்தி விளக்கமாகக் கூறியுள்ளது.
சிறைக்கூடங்கள் என்றதுமே, குற்றம், தண்டனை, கசப்பு, வெறுப்பு, கொடுமை, என்ற எண்ணங்களே நம் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். இவைகளில் பல முற்சார்பு எண்ணங்கள் (Prejudice). சிறைக்குள்ளும் கனிவு இருக்குமா? நிச்சயம் இருக்கிறது. கனிவு, பாசம், பரிவு, அன்பு என்ற உன்னத உணர்வுகள் நுழைய முடியாத இடங்கள் இருக்கவே முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். கலிபோர்னியா சிறையில் நடப்பது உலகின் பல சிறைகளில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஆனால், சிறைகளின் செய்திகள் நமக்கு இவைகளைச் சொல்வது அபூர்வம்.

இந்தச் செய்தியைப் படித்ததும், மற்றோர் எண்ணமும் எனக்குள் எழுந்தது. இன்றைய நற்செய்தியுடன் தொடர்புள்ள எண்ணம் அது. குற்றங்களைக் குறைப்பதற்கு, குற்றம் புரிந்தவர்களை மீண்டும் இயல்பு வாழ்வில் இணைப்பதற்கு சட்டங்கள், சிறைகள், தண்டனைகள் சரியான வழி அல்ல. தண்டனைகள் ஒருவரது வாழ்வில் தற்காலிகமான மாற்றங்களை, மேலோட்டமான மாற்றங்களை உருவாக்கலாம். சிறைக்கூடங்களில் உருவாகும் பரிவும், பாசமும் எத்தனையோ கோடி குற்றவாளிகளில் நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கி, அவர்களை மீண்டும் மனிதர்களாக்கியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சிறைப்பட்டோரின் மீட்பு அவர்களிடமிருந்தே வருவது அவர்கள் வாழ்வை ஆழமாக மாற்றும் வல்லமை பெற்றது.
மீட்பு என்றதும் சட்டப்படி தண்டனையிலிருந்து தப்பிப்பதை மட்டும் சொல்லவில்லை. சிலசமயங்களில், சிறையிலிருந்து விடுதலை கிடைக்காவிட்டாலும், சிறைக்குள்ளேயே அவர்கள் வாழ்வு பெருமளவு மாறியுள்ள உண்மைகளும் நாம் அறிந்ததே. இந்த வாழ்வு மாற்றம் அவர்களுக்குள்ளிருந்தே வரலாம். அல்லது, வெளியில் இருந்து வரலாம். வெளியிலிருந்து பார்வையாளர்களாக, அல்லது ஆலோசனை வழங்குபவர்களாகச் சென்று ஆயிரமாயிரம் போதனைகளை ஒருவர் சொல்லும்போது, சிறைக்குள் இருப்பவர்கள் வெளிப்படுத்தும் எண்ணத்தை நான் இவ்விதம் கேட்டிருக்கிறேன்: "வெளியில இருந்துகிட்டு இப்படி பேசுறது ஈசிங்க... நாங்க இருக்கிற நிலையில நீங்க இருந்து பாருங்க, அப்பத் தெரியும் எங்கப் பிரச்சனை, போராட்டம் எல்லாம்" என்று.
வெளியிலிருந்து வரும் போதனைகளால் பயனில்லை. சரி. வேறு வழி என்ன? மற்றொரு வழியை நான் கற்பனையில் இப்படிப் பார்க்கிறேன். குற்றமற்ற ஒருவர், சிறைப்பட்டோரைத் திருத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிறை வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மத்தியில் ஒரு கைதியாகவே வாழ முன் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அவர், கைதிகள் மீது அன்பும், பாசமும் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த முடியும். இதை நாம் கற்பனையில் பார்க்கலாம். நடைமுறையில், சட்ட ரீதியாக இது சாத்தியமா என்று தெரியவில்லை.

இதையொத்த ஓர் உண்மை நம் மீட்பு வரலாற்றில் சாத்தியமானது. பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வர வேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை மனிதரில் ஒருவராக அனுப்பி வைத்தார்.
இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விவிலிய வாக்கியம் இன்று நமது நற்செய்தியில் உள்ளது. தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3: 16)
விவிலியத்தின் வாக்கியங்கள் கோடான கோடி வழிகளில் மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பாக, நான்கு நற்செய்திகளின் ஒவ்வொரு வாக்கியமுமே மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது என்றால், அது நாம் இப்போது வாசித்த யோவான் 3: 16 என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவது எல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், கலிபோர்னியா சிறையில் ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள் கதைகளாக நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதேபோல், அன்பை வெளிப்படுத்தும் எத்தனையோ நிகழ்வுகள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை கதைகளாக வெளிவருவதில்லை.

எனவே, நமக்கு வெளியில் நடக்கும் கதைகளைக் கேட்பதற்குப் பதில், நாம் இந்த நாளில் நேரம் ஒதுக்கி, நமக்குள் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அசைபோடுவோம். நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.
நான் பிறந்து வளர்ந்த என் குடும்பத்தில், எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் பல ஆண்டுகளாக நடக்கும் அன்புப் பரிமாற்றங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. பல குடும்பங்களில் உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று எத்தனையோ பேருக்கு ஒவ்வொரு நாளும் தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று ஒவ்வொருவரும் செய்யும் சேவைகள் அற்புதமானவை. அவைகளைச் சேவைகள் என்று கூட அவர்கள் கருதுவதில்லை... கூறுவதில்லை. இந்த உன்னதமான உண்மை நிகழ்வுகள் எந்தப் பத்திரிக்கையிலும், புத்தகத்திலும் வெளியாவதில்லை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று பல ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புக் கதைகளை ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடவும் முடியாது.
ஒரு நிமிடம், ஒரு மணி நேரம், ஒரு நாள் தகனமாக மாறுவது கடினம்தான். ஆனால், பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் தகனப் பலியாக மாறுவது மிக மிகக் கடினமான ஓர் அழைப்பு, ஒரு சவால். நம் குடும்பங்களில், உலகின் பல குடும்பங்களில் இந்த அன்பு வேள்வியை, ஒவ்வொரு நாளும் நடத்திவரும் ஆயிரமாயிரம், கோடான கோடி அன்பு இதயங்களுக்காக இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.

'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல வித்தியாசமான, விபரீதமான இலக்கணங்களைத் தரும் உலகப் போக்கையும் இன்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. இந்த விபரீதப் போக்கை இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது:
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்... தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.
(யோவான் 3: 19-20)

இதற்கு நேர் மாறாக,
உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள். (யோவான் 3: 21)
என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஓர் அழைப்பையும் இறைமகன் கிறிஸ்து நமக்கு விடுக்கிறார். அழைப்பை ஏற்போமா? அல்லது இருளில் மறைந்துகொள்வோமா?








All the contents on this site are copyrighted ©.