2012-03-17 15:06:01

கர்தினால் பெர்த்தோனே:கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை


மார்ச்17,2012. லூர்து நகர் மற்றும் பிற அன்னைமரியா திருத்தலங்களுக்குத் திருப்பயணங்களை மேற்கொள்ளும் போது கிடைக்கும் ஆழமான விசுவாசத்தின் ஆழமான ஆன்மீக அனுபவம், அந்தத் திருப்பயண நாள்களோடு முடிந்து விடுவதில்லை என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
இத்திருப்பயணங்களின் போது நாம் கிறிஸ்துவின் அன்பைக் கொடையாகப் பெறுகிறோம், அத்துடன் திருப்பயணிகளுக்கு இடையே ஓர் ஆழமான நட்புணர்வும் பிணைப்பும் ஏற்படுகின்றன என்றும் கர்தினால் பெர்த்தோனே மேலும் கூறினார்.
லூர்து நகருக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் OFTAL என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதன் 80ம் ஆண்டு நிறைவையொட்டி அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு இச்சனிக்கிழமை காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
கல்வாரியில் சிலுவையடியில் நின்ற அன்னைமரியா மற்றும் சிலுவையில் இறந்த இயேசு பற்றிய சிந்தனைகளை வழங்கிய கர்தினால் பெர்த்தோனே, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை, உண்மையில் சிலுவையில் தொங்கிய இயேசு, அன்னைமரியாவுக்கும் யோவானுக்கும் செய்தது போல, நம்மை ஒருவர் மற்றவருக்குக் கொடையாகக் கொடுக்கிறார் என்று கூறினார்.
நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருப்பயணிகளை லூர்து நகருக்கும், பிற அன்னைமரியா திருத்தலங்களுக்கும் புனிதபூமிக்கும் அழைத்துச் செல்லும் OFTAL என்ற அமைப்பானது 1932ம் ஆண்டு பேரருட்திரு Alessandro Rastelli என்பவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.