2012-03-15 15:34:52

நேபாளத்தில் நிலவும் ஊழலை வேரோடு களையும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் - அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் ஷர்மா


மார்ச்,15,2012. நாட்டின் சட்டங்களைச் சீர்திருத்த முனைந்திருக்கும் நேபாள அரசு, அனைவருக்கும் உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் வழிகளை ஆராய்வது அவசியம் என்று நேபாளத்தில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Anthony Sharma, SJ கூறினார்.
நாட்டின் சட்டங்களில் மாற்றங்களைக் கொணர்வதற்கு நேபாள அரசின் பாராளுமன்றம் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், நாட்டில் நிலவும் ஊழலை வேரோடு களையும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இயேசு சபையைச் சேர்ந்த பேராயர் ஷர்மா வலியுறுத்தினார்.
தற்போது பிரதமாராகப் பணியாற்றும் Baburam Bhattarai, கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் கல்வி பயின்றவர் என்றும், வலுவான நன்னெறி கோட்பாடுகள் உள்ளவர் என்றும் சுட்டிக்காட்டிய பேராயர் ஷர்மா, இவரது தலைமையில் நேபாள அரசு நல்ல முயற்சிகளை எடுக்கும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மேமாதத்திற்குள் சட்டமாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் கூடியிருக்கும் பாராளு மன்றத்தில், பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுப்பதே சட்டத் தீர்திருத்தங்களைத் தாமதிக்கிறது என்று கூறிய பேராயர், இதனால், மக்கள் சிறிது சிறிதாக நம்பிக்கை இழந்து வருவதையும் காண முடிகிறது என்று கூறினார்.
மதச் சுதந்திரம், மதச் சார்பற்ற அரசு, அனைவரின் அடிப்படை உரிமைகளுக்கும் மதிப்பு ஆகிய கொள்கைகளை திருஅவை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் ஷர்மா மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.