2012-03-15 15:34:05

அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும்போது, அமைதி, சமுதாய முன்னேற்றம் ஆகியவை உறுதி செய்யப்படும் - பேராயர் சில்வானோ தொமாசி


மார்ச்,15,2012. குலம், மதம், மொழி என்ற அடிப்படையில் சிறுபான்மை நிலையில் இருக்கும் பல்வேறு சமுதாயங்கள் தங்கள் உரிமைகளைப் பற்றிய புரிதலில் வளர்ந்து வரும் இன்றைய காலக் கட்டத்தில், அவ்வுரிமைகளைத் தர மறுக்கும் அதிகார அமைப்புக்களும் தொடர்ந்து வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு, ஜெனீவாவில் தற்போது நடத்தி வரும் 19வது அமர்வில் திருப்பீடத்தின் சார்பில் இவ்வமைப்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, இப்புதனன்று இக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற அடிப்படையில் அரசுகள் பாகுபாடுகளை வலுப்படுத்துவதற்குப் பதில், அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும்போது, ஒவ்வொரு நாட்டிலும் அமைதி, சமுதாய முன்னேற்றம் ஆகியவை உறுதி செய்யப்படும் என்று பேராயர் தொமாசி எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு சமுதாயக் குழுவுக்கும் உரிய தனிப்பட்ட கலாச்சாரம், மொழி, மதம் என்ற பாரம்பரியங்களை வளர்ப்பதற்கு நாடுகள் முன்வரும்போது, வளம் நிறைந்த சமுதாயம் உவுவாகும் என்பதில் ஐயமில்லை என்று பேராயர் சுட்டிக் காட்டினார்.
சகிப்புத் தன்மை, சமமான மதிப்பு ஆகிய உணர்வுகளுடன் வருங்காலத் தலைமுறையினர் வளர்வதற்கு கல்வித் திட்டத்தில் மாற்றங்களை உருவாக்குவது, ஒவ்வோர் அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி பேராயர் தொமாசி வேண்டுகோள் விடுத்தார்.
"குலம், மதம், மொழி - சிறுபான்மையினரின் உரிமைகள்" என்ற தலைப்பில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 19வது அமர்வில் 80க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.