2012-03-14 15:24:49

திருத்தந்தையின் கியூபா நாட்டுத் திருப்பயணம் குறித்து, அரசுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கர்தினால் Ortega


மார்ச்,14,2012. இம்மாத இறுதி நாட்களில் மெக்சிகோ மற்றும் கியூபா நாடுகளுக்குத் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்து கியூபா நாட்டுக் கர்தினால் Jaime Ortega இச்செவ்வாய் இரவு அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
கம்யூனிச அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கியூபா நாட்டுத் தொலைக்காட்சியில் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் ஒருவரைப் பேச அனுமதித்தது ஒரு முக்கியமான விதிவிலக்காகக் கருதப்படுகிறது.
கியூபா நாட்டின் விசுவாசத்தை மீண்டும் புதுப்பிக்கவும், புதிய முறையில் நற்செய்திப் பணியை ஊக்கப்படுத்தவும் திருத்தந்தை கியூபா நாட்டிற்கு வருவது, அந்நாட்டில் பெருமளவு ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது என்று Havana பேராயர் கர்தினால் Ortega கூறினார்.
இறையியலுக்கென்று தன் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்துள்ள திருத்தந்தை தலை சிறந்த அறிவாளி என்று கூறிய கர்தினால் Ortega, புனித பேதுருவின் வழித் தோன்றலான அவர், கியூபா நாட்டிற்கு ஒரு மேய்ப்பராக வருகிறார் என்று எடுத்துரைத்தார்.
கர்தினால் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, Santiago உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Dionisio Garcia Ibáñez திருத்தந்தையின் திருப்பயணம் குறித்து தொலைக்காட்சியில் அடுத்த வாரம் உரையாற்றுவார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
கியூபா திருஅவையின் குரலுக்கு அரசு ஊடகத்தில் இடமளித்த கியூபா அரசு, தேவைப்படும் நேரங்களில் தொடர்ந்து திருஅவையின் குரலை மக்கள் கேட்கும் வண்ணம் வழிகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக கியூபத் தலத் திருஅவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Orlando Marquez கூறினார்.








All the contents on this site are copyrighted ©.