2012-03-14 15:25:46

'எருசலேமை நோக்கி உலக நடைப்பயணத்'தில் இந்தியாவும் இணைந்தது


மார்ச்,14,2012. 'எருசலேமை நோக்கி உலக நடைப்பயணம்' என்று துவக்கப்பட்டுள்ள தெற்காசிய முயற்சி ஒன்றில் அண்மையில் இந்தியாவும் இணைந்தது.
இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எருசலேம் நகரம் பாலஸ்தீனியர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி உலகின் பல நாடுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் அண்மையில் ஆரம்பித்துள்ள இந்த உலக நடைப்பயணத்தை பாராளு மன்ற உறுப்பினர் ராம்விலாஸ் பாஸ்வான் துவக்கி வைத்தார்.
54 பேர் கொண்ட இந்தக் குழுவினரின் நடைபயணம் பல்சமய செபவழிபாட்டுடன் ஆரம்பமானது. இக்குழுவினருடன் இந்தோனேசிய, மற்றும் மலேசியப் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சேர்ந்தனர். தெற்காசிய பிரதிநிதிகள் அடங்கிய இக்குழு எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக நடைபயணம் சென்று மார்ச் மாதம் 30ம் தேதி எருசலேம் அடைவார்கள்.
1976ம் ஆண்டு எருசலேம் நகருக்காக அமைதிப் போராட்டம் நடத்திய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட அடக்கு முறையால் 6 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 90க்கும் அதிகமானோர் காயப்பட்டனர். 300 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். எனவே, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 30ம் தேதி பாலஸ்தீனிய நில நாள் என்று கடைபிடிக்கப்படுகிறது.
எருசலேம் நகருக்காகப் போராடிவரும் பாலஸ்தீனியர்களுடன், உலக அமைதிக்கான நோபெல் பரிசை வென்ற பேராயர் Desmond Tutu மற்றும் Mairead Maguire ஆகியோரும் எருசலேம் நகரம் பாலஸ்தீனியர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.