2012-03-14 15:25:03

அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - சிரியாவின் திருப்பீடத் தூதர்


மார்ச்,14,2012. சிரியாவில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
ஐக்கிய நாட்டு அவை, மற்றும் அரேபிய நாடுகளின் ஒன்றியம் இவற்றின் சார்பில் சிரியா நாட்டின் தலைவருடன் பேச்சு வார்த்தை மேற்கொண்ட முன்னாள் ஐ.நா. பொதுச் செயலர் கோஃபி அன்னன் வலியுறுத்தியுள்ள அத்தனை அம்சங்களையும் தானும் வலியுறுத்துவதாக பேராயர் Zenari கூறினார்.
கடந்த ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் போராட்டங்களில், அரசின் அடக்கு முறையால் இதுவரை 8000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர் பெண்களும் குழந்தைகளும் என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
இதற்கிடையே, கோஃபி அன்னன் சிரியாவின் அரசுத் தலைவர் Bashar al-Assad உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் முழு விவரங்களும் வெளியாகவில்லை எனினும், அரசுத் தலைவர் Assad வருகிற மேமாதம் தேர்தல்களை நடத்த சம்மதித்துள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.