2012-03-13 15:38:27

நீர் சேமிப்பு என்பது ஓர் உலகச் சவாலாக தற்போது மாறியுள்ளதாக அறிக்கை


மார்ச்,13,2012. உணவுத் தேவை அதிகரிப்பு, சக்தி, கழிவகற்றல் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பின் காரணமாக நீரின் தேவையும் அதிகரித்துள்ளதால், நீர் சேமிப்பு என்பது ஓர் உலகச் சவாலாக தற்போது மாறியுள்ளதாக The water forum என்ற உலக நீர் மன்றம் கூறியுள்ளது.
தண்ணீரின் எதிர்காலம் குறித்து பிரான்ஸில் Marseille நகரில் அறிவியலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் வணிகத்துறை தலைவர்கள் என 140 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறும் மாநாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
எதிர்வருகிற 2050ம் ஆண்டளவில், உலகினால் குடியிருப்பு வழங்கப்பட்டு, உணவூட்டப்பட வேண்டிய மக்களின் மொத்த எண்ணிக்கை 700ல் இருந்து 900 கோடியாக அதிகரிக்கும் எனவும், இன்னும் 50 ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது என்பது மிகுந்த சவால் மிக்க ஒரு விடயமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கும், அபிவிருத்தி செய்வதற்குமான உலகக் கொள்கை குறித்து, வரும் சூன் மாதத்தில் ரியோ டி ஜெனீரோவில் நடக்கவிருக்கும் நீடித்த அபிவிருத்தி குறித்த ஐ.நா. மாநாட்டில் ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் 2015ம் ஆண்டிற்கான அபிவிருத்தி இலக்குகள் கூறுவதன்படி, 250 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இன்னமும் ஒழுங்கான கழிவகற்றல் வசதிகள் இல்லை, மற்றும் 10 நபர்களில் ஒருவருக்கு நல்ல குடிநீருக்கான வாய்ப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.