2012-03-12 14:53:43

திருத்தந்தையின் மூவேளை செப உரை


மார்ச்,12,2012. வன்முறை என்பது இறையரசிற்கு எதிரானது மற்றும் அது எதிர்கிறிஸ்துவின் ஆயுதம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தவக்கலத்தின் மூன்றாம் ஞாயிறன்று, இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கும் திருப்பலி வாசகத்தைச் சுட்டிக்காட்டி தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, வன்முறை ஒரு நாளும் மனித குலத்திற்கு சேவையாற்றுவதில்லை, மாறாக, மனிதனைக் கீழ்நிலைப்படுத்தவே உதவுகிறது என்றார்.
இயேசு, கோவிலில் வியாபாரிகளைச் சாட்டையால் அடித்து விரட்டியதைக் குறிப்பிடும் சில இறையிலாளர்கள், சமூகப்புரட்சிக்கு வன்முறையைக் கைக்கொள்ளலாம் என விவாதிப்பதையும் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, இயேசுவை ஒரு வன்முறையாளராக ஒரு நாளும் சித்தரிக்க முடியாது என்றார்.
இறைவன் இல்லத்தின் மீது தான் கொண்ட அன்பை இயேசு வெளிப்படுத்துகிறாரே ஒழிய, வன்முறை மூலம் இறைவனுக்குச் சேவையாற்ற முடியும் என்பதையல்ல எனவும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
எருசலேம் கோவிலில் இருந்து வியாபாரிகளை விரட்டிய நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையாடலில், இயேசு தன் உடலாகிய கோவில் பற்றிப் பேசியதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, ஆன்மீக வீட்டின் கற்களாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் மாற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.