2012-03-10 14:08:46

உலகில் சுமார் 8 இலட்சம் சிறார் சட்டத்துக்குப் புறம்பான வேலையில் பயன்படுத்தப்படுகின்றனர்


மார்ச் 10,2012. உலகில் சுமார் 8 இலட்சம் சிறார் நாட்கணக்காய் வேலை செய்வதோடு, இளம் வயதில் தாங்க முடியாத அனைத்து விதமான துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர் என்று மத்ரித்திலுள்ள சிறார் அமைப்பு ஒன்று கூறுகிறது.
இவ்வுலகில், அமெரிக்க ஐக்கிய நாடும், சொமாலியாவும் மட்டுமே, அனைத்துலக சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இன்னும் அமல்படுத்தாத நாடுகளாக உள்ளன எனக் கூறும் Camino Juvenil Solidario என்ற அமைப்பு, வயல்களில் வேலை செய்யும் சிறார் நச்சு கலந்த வேதியப் பூச்சிக் கொல்லி மருந்துகளைச் சுவாசிக்கின்றனர் என்று தெரிவித்தது.
ஈக்குவதோர் நாட்டில், விபச்சாரம், பிச்சையெடுத்தல், வீடுகளில் கொத்தடிமை போன்ற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளில், 5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட 3,67,000 சிறார் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
தாய்லாந்து போன்ற நாடுகளில் 12 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சிறார் வயல்களிலும், மற்ற சிறார் இறால் மற்றும் மீன்பண்ணைகளிலும், விபச்சாரத் தொழிலிலும், வீடுகளில் கொத்தடிமைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர் என்று Camino Juvenil Solidario அமைப்பு கூறியது.







All the contents on this site are copyrighted ©.