2012-03-10 14:02:09

உலகில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறக்குறைய 17.5 விழுக்காடாக இருந்து வருகிறது


மார்ச் 10,2012. உலகில் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறக்குறைய 17.5 விழுக்காடாக இருந்து வருகிறது என்று, இச்சனிக்கிழமை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட L’Annuario Pontificio 2012 என்ற ஏடு கூறுகிறது.
2009ம் ஆண்டில் 118 கோடியே 10 இலட்சமாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில் 119 கோடியே 60 இலட்சமாக உயர்ந்தது எனவும் இவ்வேடு கூறுகிறது.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே தலைமையிலான குழு, L’Annuario Pontificio 2012 என்ற கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்துப் புள்ளி விபரங்கள் அடங்கிய இந்த ஆண்டுப் புத்தகத்தைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தது.
2009க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, தென் அமெரிக்காவில் 0.20 விழுக்காடும், ஐரோப்பாவில் 0.22 விழுக்காடும் குறைந்துள்ளது என்றும், அதேசமயம் ஆப்ரிக்காவில் 0.40 விழுக்காடும், தென்கிழக்கு ஆசியாவில் 0.46விழுக்காடும் அதிகரித்துள்ளது என்றும் அவ்வேடு கூறுகிறது.
இதே காலக்கட்டத்தில் உலகில் ஆயர்களின் எண்ணிக்கை 5,065லிருந்து 5,104 ஆக உயர்ந்து அவ்வெண்ணிக்கை 0.77 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
2000மாம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கிய அருட்பணியாளர்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில் 4,12,236 ஆக இருந்தது என்றும், இவர்களில் மறைமாவட்ட குருக்கள் 2,77,009 என்றும், இவ்வெண்ணிக்கை ஆசியாவில் அதிகம் என்றும் L’Annuario Pontificio 2012 தெரிவிக்கிறது.
ஆயினும், 2009ம் ஆண்டில் உலகில் 7,29,371 ஆக அருட்சகோதரிகளின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில் 7,21,935 ஆகக் குறைந்துள்ளது எனவும், இவ்வெண்ணிக்கை ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் குறைந்து ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் அதி்கரித்துள்ளது எனவும் அவ்வேடு கூறுகிறது.
L’Annuario Pontificio 2012 என்ற புள்ளி விபர ஏட்டைத் தயாரித்தவர்களுக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.