2012-03-09 15:52:19

மார்ச் 09, 2012. கவிதைக் கனவுகள்.......... உண்மை உணர்ந்தால் கவலையில்லை


துளிநீர் ஒன்று, ஒன்றுக்குள் ஒன்றாய்
மலையிடைப் பிறந்து, அருவியாய் வீழ்ந்தது.
அதற்குள் இருந்தன ஆயிரம் கனவுகள்.
ஆற்றுக்குள் அதற்கு தனித்துவமில்லை.
குளமா? விளை நிலமா? முடிவு பற்றித் தெளிவில்லை.
சமுத்திரக் கூட்டணி கனவு மிச்சமாயிருந்தது.

கரைகளைத் தொட்டு விலகுவதும்,
கப்பல்களைச் சுமப்பதும்,
கல்லோடு மோதுவதும்,
மீன்களோடு விளையாடுவதும் என
கனவுகள் உரம்பெற்று நிறம்பெற்று வளர்ந்தன.
ஒரு மொத்தத்துக்குள் ஒரு முத்தாய்
அது ஓடிக்கொண்டேயிருந்தது.
கடல் இன்று வந்து விடும் என்ற கனவில்
நாட்களை உருட்டியது.

திடீரென தன் நிலையிழந்தது அந்த நீர்த்துளி!
மேகத்தின் தாகத்திற்கு தன் உடல் இளைத்து ஆவியானது.
நிலத்தில் உருண்டது, வானில் பறந்தது.
பெருங்கடல் கனவுகள் காற்றில் கலைந்தது எண்ணி
கண்ணீர் விட்டு கரைந்தது.

அதிகாலையில் பனித்துளியாய் புல் நுனியில் வந்தமர்ந்தது.
சூரியன் வரவுக்காய் காத்திருக்கும்
இந்த துளிநீருக்குச் சாவென்பதில்லை.
கனவுகளைக் குறித்து இன்று அதற்குக் கவலையில்லை,
வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி அதைத் தாண்டியும்
இருப்பதை உணர்ந்ததனால்.








All the contents on this site are copyrighted ©.