2012-03-09 16:10:12

சிறாரைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கு மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடமை உள்ளது - திருப்பீட உயர் அதிகாரி


மார்ச்09,2012. சிறாரைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கு அரசுகளுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாமல், மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடமை உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
“சிறார்க்கெதிரான பாலியல் வன்கொடுமை” என்ற தலைப்பில், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 19வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, சிறார்க்கெதிரான பாலியல் வன்கொடுமை மிகுந்த கவலை தருகின்றது என்று கூறினார்.
இந்த உலகின் சிறாரைப் பாதுகாப்பதற்கான பொறுப்பில் மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கு உள்ளதால், இச்சிறாரைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
உலகில் சண்டைகள் இடம் பெற்று வரும் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய மூன்று இலட்சம் சிறார் ஈடுபட்டுள்ளனர் எனவும், போராளிகள், தூது சொல்பவர்கள், சுமை தூக்கிகள், சமையல்காரர், கட்டாயப் பாலியல் உறவுகள் ஆகியவற்றுக்கு இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் பேராயர் தொமாசி மேலும் கூறினார்
உலகின் 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளரில் சுமார் 11 கோடியே 50 இலட்சம் சிறார் ஆபத்தான வேலைகள் செய்கின்றனர் எனவும் தெரிவித்த பேராயர், வீடுகள், பள்ளிகள் அல்லது பள்ளிகள் போன்ற பிற நிறுவனங்கள், பணியிடங்கள், சிறைகள், தடுப்புக்காவல் மையங்கள் எனப் பல இடங்களில் சிறார் வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும் தெரிவித்தார் பேராயர் தொமாசி.
வருங்காலச் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய இச்சிறார்க்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா.கூட்டத்தில் கேட்டுக் கொண்டார் பேராயர் சில்வானோ தொமாசி.








All the contents on this site are copyrighted ©.