2012-03-07 15:57:05

சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் இருமடங்காக புறக்கணிக்கப்பட்டவர்கள் - பாகிஸ்தான் ஆயர் பேரவையின் அறிக்கை


மார்ச்,07,2012. பாகிஸ்தானில் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் இருமடங்காக புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மார்ச் 8ம் தேதி இவ்வியாழனன்று கொண்டாடப்படும் உலக மகளிர் நாளையொட்டி, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"சமுதாய விளிம்பில் வாழ்வு" ("Life on the edge") என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை பாகிஸ்தானில் வாழும் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ, மற்றும் இந்துப் பெண்களிடம் எடுக்கப்பட்ட நேர்முகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உடல் மற்றும் சமுதாய அளவில் வலுவிழந்தவர்கள் பெண்கள் என்பதால், வலுக்கட்டாயமான மதமாற்றம் உட்பட பல வன்முறைகளுக்கு அவர்கள் ஆளாக வேண்டியுள்ளது என்று இவ்வறிக்கையை வெளியிட்ட நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை பீட்டர் ஜேக்கப் கூறினார்.
பெண்கள் ஆண்களுக்கு இணையான உரிமைகள் பெறுவதற்கும் சமுதாயத்தில் இருபாலருக்கும் சமமான வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும் பாகிஸ்தான் அரசு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.